மீண்டும் ஏவுகணை சோதனை நடாத்திய வடகொரியா

வடகொரியா மீண்டும் நடத்திய ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கொரிய எல்லையில் தென்கொரிய மற்றும் அமெரிக்க படைகள் இணைந்து கூட்டு போர்ப்பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை ஏவி சோதித்து வருகிறது.

எனினும் தென்கொரியாவும், அமெரிக்காவும் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக கூட்டு போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் விமானப்படைகள் வருகிற 31-ம் திகதி தொடங்கி அடுத்த மாதம் 4-ம் திகதி வரை கொரிய எல்லையில் வான்வழி பயிற்சியில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் வடகொரியா நேற்று குறுகிய தூரம் செல்லக்கூடிய 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி சோதித்ததாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.

வடகொரியாவின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள டோங்சோன் நகரில் இருந்து ஏவப்பட்ட 2 ஏவுகணைகளும் 24 கி.மீ உயரத்தில் 230 கி.மீ வரை பறந்து சென்று பின்னர் கடலில் விழுந்ததாக தென்கொரியா கூட்டுப்படைகளின் தலைவர் தெரிவித்தார்.

வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனைக்கு தென்கொரியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.