டி20 உலகக் கோப்பையில் அவுஸ்ரேலியாவை வீழ்த்திய இந்தியா

டி20 உலகக் கோப்பையில் நேரடியாக சூப்பர்12 சுற்றில் அடியெடுத்து வைக்கும் இந்திய அணி வருகிற 23-ந்தேதி பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக, இந்திய அணிக்கு இரண்டு பயிற்சி ஆட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது பயிற்சி ஆட்டம் பிரிஸ்பேனில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதன்படி முதலில் களம் இறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் ராகுல் 57 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 50 ரன்னும், கோலி 19 ரன்னும் எடுத்தனர். இதையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மிட்செல் மார்ஷ் மற்றும் பின்ச் ஆகியோர் இறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 41 ரன்கள் எடுத்தனர். இதில் மிட்செல் மார்ஷ் 35 ரன்களுக்கு அவுட் ஆனார்.

இதையடுத்து களம் இறங்கிய ஸ்மித் 11 ரன்னுக்கும், மேக்ஸ்வெல் 23 ரன்னுக்கும், ஸ்டோய்னிஸ் 7 ரன்னுக்கும் அவுட் ஆகினர். இதற்கிடையில் பின்ச் அரைசதம் அடித்தார். தொடர்ந்து ஆடிய அவர் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. இறுதி ஓவரை ஷமி வீசினார். அந்த ஓவரில் ஒரு ரன் அவுட் உட்பட 4 விக்கெட்டுகள் வீழ்ந்தது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 180 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதன் மூலம் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் ஷமி 3 விக்கெட்டும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் பட்டேல், சஹால் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்திய அணி 19-ம் தேதி தனது அடுத்த பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.