பாரிய நெருக்கடியில் சிக்கி கொள்ளப்போகும் புற்றுநோயாளர்கள்!

இலங்கையில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ள ஏராளமானோர் கடும் மருந்துப் பற்றாக்குறை காரணமாக பரிதாபகரமாக மரணத்தைத் தழுவிக் கொள்ளும் நிலையேற்பட்டுள்ளது.

குறிப்பாக மார்பக புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் tabsumab தடுப்பூசி உட்பட புற்றுநோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும் கிட்டத்தட்ட 20 வகையான மருந்துகளுக்கு கடும் பற்றாக்குறை நிலவுகின்றது.

மருந்து கையிருப்பு தீர்ந்துள்ளது

மார்பகப் புற்றுநோயாளிகளுக்காக ஆயிரம் மருந்துகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்த போதிலும் ஐநூறு மருந்துகள் மாத்திரமே இறக்குமதி செய்யப்பட்டதன் காரணமாக மருந்து கையிருப்பு தீர்ந்துள்ளது.

அதன் காரணமாகவே இந்தப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. மருந்துப் பற்றாக்குறை காரணமாக மார்பகப் புற்றுநோயாளிகளுக்கான தொடர் சிகிச்சை நிறுத்தப்பட்டதால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதார அமைச்சின் தகவல்
கொழும்பு மற்றும் கண்டி தேசிய மருத்துவமனைகள், கராப்பிட்டி மற்றும் யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலைகள் மற்றும் மஹரகம மருத்துவமனை உட்பட பல மருத்துவமனைகளில் tabsumab தடுப்பூசி உள்ளிட்ட மருந்துகள் இல்லை என சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வருடாந்தம் 3000 புற்றுநோயாளிகள் புதிதாக இனம் காணப்படுவதுடன், தினந்தோறும் ஆயிரம் நோயாளிகள் மஹரகம புற்றுநோய் மருத்துவமனையில் உள்வாரி, வெளிவாரி நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது .