இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வேலைவாய்ப்புக்காக இத்தாலி செல்ல போலியான ஆவணங்களை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கட்டுநாயக்க பிரதேசத்தில் நேற்று நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர் ஆடியம்பலம பகுதியைச் சேர்ந்த 42 வயதான ஒருவராவார்.

இவர் புத்தளம் – வென்னப்புவ பிரதேசத்தில் அலுவலகத்தை நடத்தி வந்துள்ளார்.

இத்தாலியில் வேலைக்குச் செல்லும் நபரின் ஆவணங்களை விரைவாகத் தயாரிக்க, 2,000 யூரோக்கள் அல்லது எட்டு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகையை கோரியுள்ளார்.

இந்த சந்தேக நபர் இத்தாலிய ஆவணங்களை தயாரிப்பதற்காக மேலும் பலரிடம் பணம் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது, ​​அவரது தனிப்பட்ட வாகனத்தில் இத்தாலிய தூதரகத்தின் உத்தியோகபூர்வ முத்திரைகள் போன்ற போலி முத்திரைகள் மற்றும் பல ஆவணங்களும் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.