ஐரோப்பாவில் முதலாவது குரங்கம்மை உயிரிழப்பு பதிவானது!

பிரேசில் நாட்டில் குரங்கு அம்மை தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளமை பதிவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஐரோப்பாவில் குரங்கமிஅயால் உயிரிழந்த நபராக அவர் பதிவாகியுள்ளார்.

உடல் எதிர்ப்புச் சக்திக் குறைபாடுடைய 41 வயதான ஆண் ஒருவரே உயிரிழந்துள்ளார். பிரேசிலில் சுமார் ஆயிரம் பேருக்கு குரங்கு அம்மை தொற்றியுள்ளதாக அந்நாட்டின் செய்தி ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

குரங்கு வைரஸுடன் தொடர்புடைய மற்றொரு உயிரிழப்பு ஸ்பெயினில் நிகழ்ந்துள்ளது. எனினும் அது இன்னமும் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை.

ஆபிரிக்காவின் சில பகுதிகளில் மாத்திரம் உள்ளூர் தொற்று நோயாக இருந்து வந்த குரங்கு அம்மை கடந்த மே மாதம் முதல் உலகம் முழுவதும் பரவுகின்ற தொற்று நோயாக மாறியுள்ளது.

இந்நிலையில் 75 நாடுகளில் சுமார் 18 ஆயிரம் பேர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து உலக சுகாதார நிறுவனம் கடந்த சனியன்று குரங்கு அம்மை நோயைச் சர்வதேச சுகாதார அவசரகால நிலையாகப் பிரகடனம் செய்தது.

அதிக காய்ச்சல், நிணநீர் வீக்கம் மற்றும் உடலில் – குறிப்பாகப் பாலுறுப்புப் பகுதிகளில்- சொறி என்பன குரங்கு அம்மை நோய்த் தொற்றின் ஆரம்ப அறிகுறிகள் ஆகும்.

இதேவேளை – பெரியம்மைக் குடும்பத்தைச் சேர்ந்த குரங்கு அம்மை வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி ஏற்றம் நடவடிக்கைகள் பிரான்ஸின் பாரிஸ் பிராந்தியத்தில் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதற்காக 18 இடங்களில் தடுப்பூசி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

தொற்றுச் சூழ்நிலையில் இருப்போர், தொற்றாளர்களுடன் தொடர்புடையோர் மற்றும் நோயாளர்களைப் பராமரிக்கும் மருத்துவப் பணியாளர்கள் அடங்கலாக சுமார் 8 ஆயிரம் பேருக்குப் பெரியம்மைத் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.