காலிமுகத்திடல் தாக்குதல் சம்பவத்தை கண்டிக்கும் வகையில் யாழில் நாளை போராட்டம் முன்னெடுப்பு!

காலிமுகத்திடல் தாக்குதல் சம்பவத்தை கண்டிக்கும் வகையில், நாளைய தினம் யாழில் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த போராட்டத்தில் இன, மத, கட்சி. பிரதேச பேதமின்றி கலந்து கொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். யாழ் ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி செயலகத்திலிருந்து இன்றைய தினம் போராட்டக்காரர்கள் வெளியேறுவதாக கூறப்பட்ட போதிலும் நேற்று நள்ளிரவு நேரத்தில் பாதுகாப்பு தரப்பினரால் அப்பாவி இளைஞகள், யுவதிகள், சிறுவர்கள் , குழந்தைகள் மீது மிகவும் மிலேச்சத்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இவ்வாறு போராட்டக்காரர்கள் மீது ஏவி விடப்பட்ட பாதுகாப்பு தரப்பினர், ரணில் – ராஜபக்சக்களுடைய கைக்கூலிகளாக இருக்கிறார்கள் என்பது தற்போது ஆணித்தரமாக மக்களுக்கு தெரியவந்துள்ளது.

ரணில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு எந்தவிதமான அருகதை அற்ற மனிதர் என்பது இலங்கை வாழ் மக்கள் அனைவருக்கும் தெரிந்த விடயமாகும். நேற்றிரவு போராட்டக்கர்கள் மீது ஏற்படுத்தப்பட்ட தாக்குதல் என்பது கறுப்பு ஜூலையினை மீண்டும் கொண்டு வருதற்கான ரணில் விக்கிரமசிங்கவின் ஏற்பாடென தோன்றுகிறது.

எனவே அடக்கு முறைகளை கட்டவிழ்த்து அந்த அடக்குமுறையின் மூலமாக தன்னை தக்க வைக்க முடியும் என்பதை முடியும் ரணில் விக்கிரமசிங்க கனவிலும் நினைத்துப் பார்க்க வேண்டாம். அன்றைய இளைஞர்கள் அல்ல இன்றைய இளைஞர்கள் ,உங்களின் அனைத்துவிதமான சித்து விளையாட்டுக்களும் இன்று மக்கள் மத்தியில் வெளிப்பட்டுக் கொண்டு நிற்கின்றது.

தமிழ் ,சிங்கள ,முஸ்லிம் மக்கள் என ஒன்றாக குரல் எழுப்பட்ட போராட்டமாக காலி முகத்திடல் போராட்டம் அமைந்திருந்தது. இந்த போராட்டம் மீது நீங்கள் கை வைத்துள்ளீர்கள் . நேற்றைய இரவு தரைமட்டமாக்க இருந்த இந்த போராட்டத்தினை, மீண்டும் நிர்மாணிப்பதற்கு அதே பாதிக்கப்பட்ட இளைஞர்கள் ,தொழிலற்சங்கங்கள், அரசியல்வாதிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பதையும் மறந்து விட வேண்டாம்.

இனியும் இந்த நாட்டில் அடக்குமுறையினால் இளைஞர்களை ஒடுக்குவதற்கு எண்ணுவீர்களாக இருந்தால் அது வெறும் பகற்கனவு. மக்களோ , நாடோ ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி நீங்கள் இல்லை என்பதை மறந்து விட வேண்டாம். இவ்வாறான ஒடுக்குமுறைகள் தொடருமாக இருந்தால் ரணில் – ராஜபக்சக்களை விரட்டி அடிப்பதற்கு நாட்டின் அனைத்து மக்களும் அணிதிரள வேண்டும் .

எனவே, யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற மக்கள்,அரசியல் வாதிகள் எந்தவிதமான கட்சி ,மத ,ஜாதி பேதமின்றி ,பிரதேசவாதங்கள் இல்லாது அனைவரும் ஒன்று சேர்ந்து காலி முக த்திடல் போராட்டக்காரர்களுக்கு நியாயத்தினை பெற்றுக் கொள்வதற்காகவும் அவர்கள் மீதான தாக்குதல்களையும் கண்டித்து நாளை பி.ப 1.00 மணியளவில் யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நடைபெற இருக்கின்ற போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மேலும் கேட்டுக்கொள்கின்றோம் என இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.