இதுவரை வரிசைகளில் நின்று உயிரிழந்தோர் விபரம்

எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு வரிசைகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 வரை அதிகரித்துள்ளதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு வரிசைகளில் உயிரிழந்தவர்களுக்கு உடனடியாக இழப்பீடுகளை வழங்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

வரிசைகளில் இறந்தவர்களுக்கு இழப்பீடு செலுத்தவில்லை என்றால், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய போவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கமான ஐக்கிய ஒருங்கிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக அவற்றை கொள்வனவு செய்ய நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருக்கின்றனர்.

கடந்த காலத்தில் இப்படியான வரிசைகளில் காத்திருந்த 12 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், அண்மையில் பாணந்துறை பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் வரிசையில் காத்திருந்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவர், முச்சக்கர வண்டிக்குள்ளேயே உயிரிழந்தார்.