பொலிசாரை மோசமாக திட்டிய அரசியல்வாதியும் அவரது மகனும்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆராச்சியின் மகன் மற்றும் மருமகள் ஆகியோர் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

அதில் திலிப் வெத ஆராச்சியின் மகனும் மருமகளும் பொலிஸாரை கெட்ட வார்த்தைகளால் திட்டுகின்றனர். நான் யார் என்று காட்டுகிறேன்.

இன்னும் சற்று நேரத்தில் இந்த இடத்திற்கு எப்படி வருகிறேன் பார் என அந்த இளைஞன் ஆவேசமாக கூறுகிறார். அத்துடன் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரை தாக்க முயற்சிக்கின்றார்.

போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரையே இவர்கள் திட்டுகின்றனர். இந்த சம்பவத்தை அங்கிருந்த மற்றுமொரு பொலிஸ் உத்தியோகஸ்தர் தனது கையடக்க தொலைபேசியில் பதிவு செய்துள்ளார். இந்த சம்பவம் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெந்திகம பிரதேசத்தில் நடந்துள்ளது.
அதேவேளை பொலிஸ் உத்தியோகஸ்தரை கெட்ட வார்த்தைகளால் திட்டி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெத ஆராச்சியின் புதல்வர் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக பொலிஸ் உத்தியோகஸ்தர் வீரகெட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இவர்கள் பயணம் செய்த டபிள் கெப் வாகனத்தின் பின்னால், குளிர்சாதனப் பெட்டியை பாதுகாப்பற்ற முறையில் ஏற்றிச் சென்றதை பொலிஸார் கண்டித்துள்ளனர்.

அப்போது திலிப் வெத ஆராச்சியின் மகனும் மருமகளும் கெட்ட வார்த்தைகளால் திட்டி அச்சுறுத்தியதாக பொலிஸ் உத்தியோகஸ்தர் முறைப்பாட்டில் கூறியுள்ளார்.