எக்ஸ்பாக்ஸ் ஸ்டிரீமிங் சாதனத்தை அறிமுகம் செய்யும் மைக்ரோசாப்ட்?

மைக்ரோசாப்ட் நிறுவனம் எக்ஸ்பாக்ஸ் ஸ்டிரீமிங் சாதனத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் எக்ஸ்பாக்ஸ் ஸ்டிரீமிங் சாதனத்தை அடுத்த 12 மாதங்களுக்குள் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்டிரீமிங் சாதனம் கொண்டு பயனர்கள் திரைப்படங்கள், டி.வி. சேவைகள் மற்றும் எக்ஸ்பாக்ஸ் கேம் பாஸ் அல்டிமேட் தளத்தில் உள்ள கேம்களை பயன்படுத்த முடியும்.

சாம்சங் நிறுவன டி.வி. மாடல்களில் வழங்குவதற்கென எக்ஸ்பாக்ஸ் கேம் ஸ்டிரீமிங் செயலி ஒன்றை மைக்ரோசாப்ட் நிறுவனம் சாம்சங் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. எக்ஸ்பாக்ஸ் கிளவுட் கேமிங் பயனர்கள் இனி ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ். மற்றும் விண்டோஸ் சாதனங்களில் ஃபோர்ட்னைட் கேமினை இலவசமாக விளையாட முடியும் என மைக்ரோசாப்ட் சமீபத்தில் அறிவித்து இருந்தது.

மைக்ரோசாப்ட் உருவாக்கி வரும் ஸ்டிரீமிங் ஸ்டிக் தோற்றத்தில் அமேசான் ஃபயர் டி.வி. ஸ்டிக் அல்லது ரோக்கு போன்றே காட்சியளிக்கும் என கூறப்படுகிறது. பயன்களும் அமேசான் ஃபயர் டி.வி. ஸ்டிக் போன்றே திரைப்படங்கள், டி.வி. சேவைகள் மற்றும் கேம்கள் வழங்கப்படும் என தெரிகிறது.

புதிய எக்ஸ்பாக்ஸ் டி.வி. ஸ்டிக் மற்றும் எக்ஸ்பாக்ஸ் செயலி அடுத்த 12 மாதங்களில் அறிமுகம் செய்யப்பட்டு விடும் என கூறப்படுகிறது. இரு திட்டிங்களின் மூலம் எக்ஸ்பாக்ஸ் பயனர் எண்ணிக்கையை வெகுவாக அதிகப்படுத்த முடியும் என்றே தெரிகிறது.