கோடை காலத்தில் சன்ஸ்கிரீன் பயன்படுத்தும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

நீச்சல் அடித்து குளித்துவிட்டு வந்தாலோ, உடற்பயிற்சி செய்தாலோ அல்லது வெப்பத்தின் தாக்கம் காரணமாக வியர்வையில் நனைந்தாலோ தண்ணீரில் நன்றாக கழுவிவிட்டு மீண்டும் சன்ஸ்கிரீன் தடவ வேண்டும்.

மற்ற பருவ காலங்களை விட கோடையில், சருமத்தைப் பாதுகாப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சூரிய ஒளி கதிர் வீச்சில் இருந்து சருமத்தை தற்காத்துக்கொள்வதற்கு சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதே சிறந்த வழி. ஆனால் சன்ஸ்கிரீனை சரியான முறையில் பயன்படுத்துவதும் முக்கியமானது. அதற்கு உதவும் டிப்ஸ்கள் உங்கள் கவனத்திற்கு…

* சன்ஸ்கிரீனை முகத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றில்லை. அப்படி பயன்படுத்துவதும் தவறானது. உடலில் சூரிய ஒளி படும் இடங்கள் எல்லாவற்றிலும் சன்ஸ்கிரீனை பயன்படுத்த வேண்டும். வெளியே செல்வதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு பயன்படுத்த வேண்டும்.

* சன்ஸ்கிரீன் அல்லது லோஷனைப் பயன்படுத்தும்போது முகத்தில் அடர்த்தியாக தடவி விடக்கூடாது. உள்ளங்கையில் குவித்துவிட்டு பின்னர் முகத்தில் ஆங்காங்கே புள்ளி போல் வைக்க வேண்டும். பின்பு விரல் நுனியை கொண்டு முகம் முழுவதும் தடவ வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் சன்ஸ்கிரீன் விரைவாகவும், சமமாகவும் உறிஞ்சப்படும்.

* சன்ஸ்கிரீனை சருமத்தில் தடவும்போது திட்டுக்களாக எங்கும் படிந்திருக்கக்கூடாது. அதன் எச்சம் எதுவும் காணப்படாமல் உறிஞ்சப்படும் வகையில் வெளிப்புற சருமம் முழுவதும் தடவ வேண்டும்.

* காதுகள், கழுத்து, பாதங்கள் மற்றும் முதுகு போன்ற பகுதிகள் முகத்தை விட சற்று கடினமானவை. அந்த பகுதிகளில் சன்ஸ்கிரீன் தடவுவதற்கு மறந்துவிடாதீர்கள்.

* கோடை காலத்தில் வெயிலில் இருந்து பாதுகாப்பாக இருக்க, இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சன்ஸ்கிரீன் தடவ வேண்டும். நீச்சல் அடித்து குளித்துவிட்டு வந்தாலோ, உடற்பயிற்சி செய்தாலோ அல்லது வெப்பத்தின் தாக்கம் காரணமாக வியர்வையில் நனைந்தாலோ தண்ணீரில் நன்றாக கழுவிவிட்டு மீண்டும் சன்ஸ்கிரீன் தடவ வேண்டும்.

* 30 அல்லது அதற்கு மேற்பட்ட எஸ்.பி.எப் கொண்ட சன்ஸ்கிரீனை தேர்ந்தெடுங்கள். அது யூ.வி.ஏ மற்றும் யூ.வி.பி கதிர்களில் இருந்து பாதுகாப்பு வழங்கும். நிறைய தண்ணீர் குடிப்பது மற்றும் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது சருமத்திற்கு இயற்கையான பளபளப்பை வழங்கும் என்பதை மறவாதீர்கள்.