உடல் நல குறைவிலும் சாமர்த்தியமாக பயணிகளை காப்பாற்றிய பஸ் சாரதி

உடல் நலக்குறைவையும் பொருட்படுத்தாமல் உரிய நேரத்தில் சாமர்த்தியமாக செயல்பட்டு பஸ்சை நிறுத்தி பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் காப்பாற்றிய அரசு டிரைவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

தூத்துக்குடியில் இருந்து ஏரல், தென்திருப்பேரை, கடையனோடை, நாசரேத் வழியாக சாத்தான்குளத்துக்கு அரசு பஸ் (தடம் 146 டி) நேற்று 9.20 மணிக்கு புறப்பட்டு சென்றது.

பஸ்சை தூத்துக்குடி பத்திரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 43) என்பவர் ஓட்டினார். நடத்துனராக எட்டயபுரத்தை சேர்ந்த அழகுராம் (48) பணியில் இருந்தார். பஸ்சில் 40 பயணிகள் இருந்தனர்.

நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரத்தில் பஸ் வந்தபோது டிரைவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் டிரைவர் பாலசுப்பிரமணியன் சாமர்த்தியமாக செயல்பட்டு பஸ் நிறுத்தம் அருகே சாலையோரம் பஸ்சை நிறுத்தியவுடன் மயங்கினார்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் அவரை மீட்டு மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவருக்கு ரத்ததொதிப்பு அதிகமாக இருந்தது தெரிய வந்தது.

உடனயாக அவருக்கு உரிய சிகிச்சை அளித்தனர். இதற்கிடையே பஸ்சில் வந்த அனைத்து பயணிகளும் வேறு பஸ்சில் ஏற்றி அனுப்பப்பட்டனர்.

தன் உடல் நலக்குறைவையும் பொருட்படுத்தாமல் உரிய நேரத்தில் சாமர்த்தியமாக செயல்பட்டு பஸ்சை நிறுத்தி பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் காப்பாற்றிய அரசு டிரைவர் பாலசுப்பிரமணியத்துக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

நகர தி.மு.க. செயலாளர் ரவி செல்வக்குமார், நாசரேத் பேரூராட்சி தலைவர் நிர்மலாரவி, துணைத்தலைவர் அருண்சாமுவேல் என்ற தம்பு, மூக்குப்பீறி ஊராட்சிமன்ற தலைவர் கமலா கலையரசு, ஊராட்சிமன்ற உறுப்பினர் கலையரசு, மாவட்ட தி.மு.க. பிரதிநிதிகள் சாமுவேல், முருகதுரை மற்றும் சமூக ஆர்வலர்கள் டிரைவரை பாராட்டினர்.