ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணை அவசியம்!

ஈஸ்டர் ஞாயிறு தொடர் குண்டு தாக்குதல் சம்பந்தமாக தற்போது புதிய விடயங்கள் வெளியாகியுள்ளதால், அனைவரும் இணைந்து அவை தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணைகளை நடத்த வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பாக புதிய விடயங்கள் வெளிவந்துள்ளன.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் சிலருக்கு எதிராக வழக்கு தொடருமாறு பரிந்துரைக்கப்பட்டது. விசாரணையை நடத்தி அரசாங்கம், முன்னாள் பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. நீதிமன்றத்தின் முடிவுக்கு அமைய குற்றம் சுமத்தப்பட்ட தரப்பினரின் சாட்சியங்களை விசாரிக்காது நீதிமன்றம் குற்றம் சுமத்தப்பட்டவர்களை விடுதலை செய்தது.

அதேபோல் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூன்று பேரும் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இறுதியில் குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர நீதிமன்றத்தில் சத்தியக் கடிதம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

ஷானி அபேசேகரவுக்கு அமைய குறிப்பாக இராணுவ புலனாய்குப் பிரிவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் அனைவரும் இணைந்து பக்கசார்பற்ற முடிவை எடுக்க வேண்டும் என நான் நினைக்கின்றேன் என ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.