கொரோனோவிற்கு மருந்து தயாரித்தவரின் சகோதரர் கொரோனோவால் பலி!

கொரோனா வைரஸ் தொற்று நோயை குணப்படுத்த தேசிய மருந்தை தயாரித்தார் என்று கடந்த காலங்களில் பிரபலமாக பேசப்பட்ட கேகாலை உடுமாகம பிரதேசத்தை சேர்ந்த தம்மிக்க பண்டார என்பவரின் சகோதரர் ஒருவர் கோவிட் நிமோனியா காரணமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் தயாரித்த மருந்துக்கு தம்மிக்க பாணி என பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டது. கேகாலை பொலிஸ் பிரிவில் ஹெட்டிமுல்ல மாகுர கணேகொடதென்ன பிரதேசத்தில் வசித்து வந்த 58 வயதான அப்புக்குட்டி கங்கானம்லாகே ஹின்பண்டார என்பவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர், புற்று நோயிக்கு சிகிச்சை பெற்று வந்துள்ளதுடன் கடந்த 12 ஆம் திகதி வீட்டில் மரணமடைந்துள்ளார்.

இதனையடுத்து கேகாலை நகர வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணையாளர் ரோணுகா சுபோதனி களுவாராச்சி நிஸ்சங்க மற்றும் கேகாலை பொலிஸார், மேலதிக பரிசோதனைகளுக்காக சடலத்தை வீட்டில் இருந்து வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

கேகாலை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட ரெபீட் என்டிஜன் பரிசோதனையில் அவருக்கு கொரோனா நோய் தொற்றி இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து கடந்த 13 ஆம் திகதி வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அவர் கோவிட் நிமோனியா காரணமாக மரணித்துள்ளதாக திடீர் மரண விசாரணையாளர், குடும்பத்தினருக்கு அறிவித்துள்ளார். இதன் பின்னர் உடல் தொடர்பான தகன கிரியைகள் கேகாலை தகன மயானத்தில் நேற்று மாலை நடத்தப்பட்டுள்ளன.