ஆன்லைன் மோகத்தால் பலியான குடும்பம்

பாக்கிஸ்தானில் ஆன்லைன் கேம் PUBG-ன் தாக்கத்தால் 14 வயது சிறுவன் தனது முழு குடும்பத்தையும் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் கடந்த வாரம் பாக்கிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் தலைநகர் லாஹூரில் நடந்துள்ளது. சம்பவம் குறித்து தெரியவருகையில்,

45 வயதான சுகாதாரப் பணியாளர் நஹித் முபாரக், லாகூரில் உள்ள கஹ்னா பகுதியில் அவரது 22 வயது மகன் தைமூர் மற்றும் 17 மற்றும் 11 வயதுடைய இரண்டு மகள்களுடன் இறந்து கிடந்தனர். இந்நிலையில் அவரது 14 வயது மகனே குடும்பத்தில் உள்ள அனைவரையும் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு வீட்டில் தனியாக உட்கார்ந்து இருந்ததாக பொலிஸாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“PUBG (PlayerUnknown’s Battlegrounds) ஒன்லைன் கேமிற்கு அடிமையான அச்சிறுவன், அந்த விளையாட்டின் தாக்கத்தில் தன் தாயையும் உடன்பிறந்தவர்களையும் கொன்றதாக ஒப்புக்கொண்டான். இந்நிலையில் குறித்த சிறுவன் நாள் முழுவதும் நீண்ட நேரம் ஆன்லைன் கேம் விளையாடுவதால் அவர் சில உளவியல் சிக்கல்களை உருவாக்கியுள்ளார்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நஹித் விவாகரத்து பெற்றவர் என்றும், தனது படிப்பில் கவனம் செலுத்தாததற்காகவும், PUBG விளையாட்டில் அதிக நேரத்தை செலவிடுவதற்காகவும் சிறுவனை அடிக்கடி எச்சரித்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

“சம்பவத்தன்று, நஹித் இந்த விடயத்திற்காக சிறுவனை திட்டினார், பின்னர், சிறுவன் அலமாரியில் இருந்து தனது தாயின் கைத்துப்பாக்கியை எடுத்து, அவளையும் அவனது மற்ற மூன்று உடன்பிறப்புகளையும் தூக்கத்தில் சுட்டுக் கொன்றதாகவும் கூறப்படுகின்றது. ஆனால், அடுத்த நாள் காலை, சிறுவன் அழுது கூச்சலிட்டுள்ளான், அக்கம்பக்கத்தினர் பொலிஸை அழைத்தனர்.

அந்த நேரத்தில் சிறுவன் தான் வீட்டின் மேல் மாடியில் இருந்ததாகவும், அவனது குடும்பம் எப்படி கொல்லப்பட்டது என்று தெரியவில்லை என்றும் பொலிசாரிடம் கூறியதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உரிமம் பெற்ற அந்த கைத்துப்பாக்கி, அவரது குடும்பத்தின் பாதுகாப்பிற்காக நஹித் வாங்கியதாக தெரிவிக்கப்படும் நிலையில், கொலைகளை செய்துவிட்டு சிறுவன் வடிகாலில் வீசிய அந்த துப்பாக்கி இன்னும் மீட்கப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் சிறுவனின் இரத்தக் கறை படிந்த துணி மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் டான் செய்தித்தாளில் ஒரு அறிக்கையின்படி, லாகூரில் ஓன்லைன் கேம் தொடர்பான நான்காவது குற்றம் இது என தெரிவிக்கப்பட்டுள்ளது.