கொரோனா வைரஸை எதிர்க்கும் அற்ப்புத மூலிகை

ஹிமாச்சல பிரதேசத்தில் விளையும் ஒருவித மூலிகைச் செடியில் உருவாகும் ரசாயனப் பொருளுக்கு கொரோனா வைரஸை எதிர்க்கும் திறன் உள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹிமாச்சலப் பிரதேசத்தின் (Himachal Pradesh) மண்டியில் உள்ள ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப மையம் மற்றும் சர்வதேச மரபணு பொறியியல் மற்றும் உயிரிதொழில்நுட்ப மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸுக்கு எதிரான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்ததாவது,

தற்போது கொரோனா வைரஸுக்கு எதிராக கொரோனா தடுப்பூசி வழங்கப்படுகிறது. அடுத்தகட்டமாக வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கான மருந்துகள் தயாரிப்பதற்கான ஆய்வுகள் பல நாடுகளில் நடந்து வருகின்றன.

ஹிமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட இமயமலை பகுதியில் விளையும் ‘புரன்ஷ்’ என்ற செடியை, வைரஸ் நோய்களுக்கு எதிராக உள்ளூர் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

சுடுநீரில் இந்த மூலிகைச் செடியின் இலைகளை போட்டு, அதன் சாற்றை குடிப்பதால் வைரஸ் நோய் குறைவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இந்த செடியை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். இதன்படி இந்த செடியின் இலைகளில் உருவாகும் சில ரசாயனப் பொருட்களுக்கு கொரோனா வைரஸை எதிர்க்கும் சக்தி இருப்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகின்றன. இச் செடியின் ரசாயனப் பொருளில் இருந்து கொரோனா வைரஸை தடுக்கும் மருந்து தயாரிப்பதற்கான முதல் படியை எட்டியுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்