டுவிட்டர் மீதான தடையை நீக்கியது நைஜீரியா

நைஜீரிய அதிபர் முகமது புஹாரி பதிவிட்ட கருத்தை டுவிட்டர் நிறுவனம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நீக்கியது.

நைஜீரிய நாட்டின் அதிபராக செயல்பட்டு வருபவர் முகமது புஹாரி.

கடந்த ஆண்டு அரசுக்கு எதிராக பொதுமக்கள் பல்வேறு நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்போது சிவில் போர் ஏற்படும் சூழ்நிலை நிலவியது.

இதையடுத்து, 1967-70 வரை நைஜீரியாவில் நடைபெற்ற உள்நாட்டு சண்டையை மேற்கொள் காட்டி வன்முறையைத் தூண்டும் வகையில் அதிபர் முகமது புஹாரி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார்.

அவரது கருத்து, போராட்டத்தில் ஈடுபடுவர்கள் மீது தாக்குதலை நடத்தத் தூண்டுவது போல அமைந்துள்ளது எனக்கூறி அதிபர் முகமதுவின் கருத்தை தங்கள் வலைதள பக்கத்தில் இருந்து டுவிட்டர் நிறுவனம் நீக்கியது.

இதற்கிடையே, அதிபரின் டுவிட்டர் பதிவு நீக்கப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நைஜீரியாவில் டுவிட்டருக்கு தடை விதித்தது. மக்கள் சமூக வலைதளமான டுவிட்டரை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், நைஜீரிய அதிபர் முகமது புஹாரி ஒப்புதலுடன் ஏழு மாதத்துக்கு பிறகு டுவிட்டர் மீதான தடையை அந்நாட்டு அரசு இன்று நீக்கியுள்ளது