கனடாவில் தடுப்பூசி போடாதவர்களுக்கு மருத்துவ வரி விதிக்க முடிவு!

கனடாவில் தடுப்பூசி போடாதவர்களுக்கு மருத்துவ வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் தோன்றிய உயிர்க்கொல்லி வைரசான கொரோனா 2 ஆண்டுகளை கடந்தும் உலகை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. இந்த கொடிய வைரஸ், ‘டெல்டா, காமா, ஒமைக்ரான்’ என புது, புது பரிமாணங்களில் உலகுக்கு தனது கோர முகத்தை காட்டி வருகிறது.

உலகம் முழுவதும் கடந்த ஆண்டின் பிற்பகுதியில் கொரோனா தொற்றின் வேகம் சற்று குறைந்து, உலகம் இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருந்த நிலையில் ஆண்டு இறுதியில் வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுத்தது.

அந்த வகையில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்தியாவிலும் கொரோனாவின் 3-வது அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

கொரோனா வைரஸ் இப்படி ஜெட் வேகத்தில் பரவுவதற்கு காரணமாக அமைந்தது, தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான்.

கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ், அதாவது 2 டோஸ் செலுத்திக்கொண்ட குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகு வழங்கப்படும் 3-வது டோஸ் ஒமைக்ரானை கட்டுப்படுத்தும் என சுகாதார நிபுணர்கள் நம்புகின்றனர்.

இதனால் உலக நாடுகள் அனைத்தும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றன.

அதே வேளையில் அமெரிக்கா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் முதல் டோஸ் தடுப்பூசி கூட செலுத்திக்கொள்ளாதவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இதனால் அந்த நாடுகள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

இந்த நிலையில் கனடாவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்களுக்கு மருத்துவரி விதிக்க அங்குள்ள ஒரு மாகாண அரசு முடிவு செய்துள்ளது.

கனடாவில் அதிக மக்கள் தொகையை கொண்ட 2-வது மாகாணமான கியூபெக்கில் கொரோனா தொற்று பாதிப்பு அதிதீவிரமாக இருந்து வருகிறது. நாட்டிலேயே அதிக அளவில் கொரோனா உயிரிழப்புகள் அங்குதான் நிகழ்ந்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி அங்கு இதுவரை கொரோனா தொற்றால் 12 ஆயிரத்து 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

எனவே உயிரிழப்புகளை தவிர்ப்பதற்கு அந்த மாகாண அரசு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் அந்த மாகாணத்தில் 85 சதவீதத்துக்கும் அதிகமானோர் குறைந்தபட்சம் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர்.

சுமார் 13 சதவீதம் பேர் மட்டுமே முதல் டோஸ் தடுப்பூசி கூட செலுத்திக்கொள்ளமால் உள்ளனர். அவர்களையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வைப்பதற்கு மாகாண அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கியூபெக் மாகாணத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு மருத்துவ வரி விதிக்க முடிவு செய்துள்ள மாகாண பிரதமர் பிராங்கோயிஸ் லெகால்ட் அறிவித்துள்ளார்.

பத்திரிகையாளர்களிடம் இதுகுறித்து அவர் கூறுகையில் “தடுப்பூசியின் முதல் டோஸ் பெறாதவர்கள் வரி செலுத்த வேண்டும். கட்டணம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. சில தியாகங்களைச் செய்து தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்களுக்கு இது நியாயமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். நாம் அவர்களுக்கு கடன்பட்டிருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன்” என கூறினார்.