கஜகஸ்தானில் இடம்பெற்ற கலவரத்தில் 164 பேர் பலி

அல்மாட்டி விமான நிலையமும் மூடப்பட்டது. வன்முறையில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுடுமாறு அந்நாட்டு அதிபர் காசிமா ஜோமார்ட்டோகயோவ் உத்தரவிட்டார்.

அல்மாட்டி:
மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் வாகனங்களில் பயன்படுத்தப்படும் திரவ வடிவிலான வாயு (எல்பிடி) விலை உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்கு பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து அவர்கள் கடந்த வாரம் போராட்டத்தில் குதித்தனர். இதனால் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. பொது மக்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபடுபவர்களை சமாதானப்படுத்த பிரதமர் ஆஸ்கர் மமின் தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா செய்தது. ஆனாலும் பொது மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்கள் கார்கள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதில் ஏராளமான வாகனங்கள் சேதம் அடைந்தன.

அல்மாட்டி விமான நிலையமும் மூடப்பட்டது. வன்முறையில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுடுமாறு அந்நாட்டு அதிபர் காசிமா ஜோமார்ட்டோகயோவ் உத்தரவிட்டார்.

இதனால் பொது மக்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டது.

வன்முறையை அடக்க பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டனர். வன்முறை சம்பவங்களில் 164 பேர் இறந்தனர். இதில் பாதுகாப்பு படையினரை சேர்ந்த 16 பேர் பலியானார்கள்.

மேலும் போராட்டக்காரர்கள் 2,200 பேரும், பாதுகாப்பு படையினர் 1,300 பேரும் படுகாயம் அடைந்தனர்.

தற்போது கஜகஸ்தானில் நிலைமை கட்டுக்குள் வந்துள்ளதாகவும், போராட்டக்காரர்கள் பிடியில் இருந்து அரசு அலுவலகங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.