தமிழகத்தின் திருப்பூரில் அனுமன் ஜெயந்தி அன்று யாகம் வளர்த்த நெருப்பில் ஆஞ்சநேயர் உருவம் தெரிவதாக கூறி பக்தர்கள் பரவசம் அடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்ற நிலையில் குறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே வளையக்காரன் வலசில் வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. அங்கு அனுமன் ஜெயந்தி முன்னிட்டு இந்த கோவிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது. யாகத்தில் வாசனை திரவியங்கள் கொஞ்சம் கொஞ்சமாக போடப்பட்டபோது நெருப்பில் ஆஞ்சநேயர் திருஉருவம் தெரிந்தது.
இதைக் கண்ட பக்தர்கள் பரவசம் அடைந்து பயபக்தியுடன் ஆஞ்சநேயா, ஆஞ்சநேயா, ராம பக்தா என கரகோஷம் எழுப்பினர். அத்துடன் யாக நெருப்பில் ஆஞ்சநேயர் உருவம் தத்ரூபமாக தெரிந்தது. மேலும் அந்த பகுதியில் குரங்குகளையே காண முடியாது என கூறப்படுகின்றது.
எனினும் யாகம் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது திடீரென்று கோவிலுக்குள் 2 குரங்குகள் நுழைந்து கருவறையில் இருந்த பழங்களை எடுத்து சாப்பிட்டதை கண்ட பக்தர்கள் ஆஞ்சநேயரே வந்துவிட்டார் என பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் குறித்த தகவல் சமூகவலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகிவருகின்றது.