இந்தியாவில் புதிதாக 13,154 பேருக்கு கொரோனா…

குஜராத், ஜார்கண்ட், அரியானா, உத்தரபிரதேசம், சென்னை, ஒடிசா, ராஜஸ்தான், தெலுங்கானா, பீகார், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் தினசரி பாதிப்பு நேற்று உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக மீண்டும் வேகமாக பரவி வருகிறது.

ஒரு மாதத்துக்கு மேலாக நாட்டில் தினசரி பாதிப்பு 10 ஆயிரத்துக்கு உள்ளாகவே இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று 13 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,154 பேருக்கு தொற்று உறுதியானதாக தெரிவித்துள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு தினசரி பாதிப்பு 6,358 ஆக இருந்தது. மறுநாள் 9,195 ஆக உயர்ந்த நிலையில், தற்போது 13 ஆயிரத்தை கடந்துள்ளது.

நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில், பாதிப்பு ஒரேநாளில் 43 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் தினசரி பாதிப்பு கடந்த 2 நாட்களில் சுமார் இரு மடங்கு உயர்ந்து அதிர்ச்சி அளித்துள்ளது.

நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 48 லட்சத்து 22 ஆயிரத்து 40 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று அதிகபட்சமாக மராட்டியத்தில் 3,900 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவில் அம்மாநிலத்தில் தினசரி பாதிப்பில் அதிகம் ஆகும்.

குறிப்பாக தலைநகர் மும்பையில் 2,445 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இது அங்கு 110 நாட்களில் இல்லாத அளவில் அதிகம் ஆகும்.

இதேபோல டெல்லியில் நேற்று முன்தினம் 496 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்த நிலையில், நேற்று 923 ஆக உயர்ந்தது. இது மே 30-ந் தேதிக்கு பிறகு இதுவரை இல்லாத அளவில் டெல்லியில் தினசரி பாதிப்பில் அதிகம் ஆகும்.

கேரளாவில் 2,846 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் தினசரி பாதிப்பு 752-ல் இருந்து 1,089 ஆக உயர்ந்தது. கர்நாடகாவில் 356-ல் இருந்து தினசரி பாதிப்பு 566 ஆக அதிகரித்தது.

குஜராத், ஜார்கண்ட், அரியானா, உத்தரபிரதேசம், சென்னை, ஒடிசா, ராஜஸ்தான், தெலுங்கானா, பீகார், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் தினசரி பாதிப்பு நேற்று உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பால் கேரளாவில் 211 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 268 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,80,860 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 7,468 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 42 லட்சத்து 58 ஆயிரத்து 778 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது ஆஸ்பத்திரிகளில் 82,402 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்று முன்தினத்தை விட 5,400 அதிகம் ஆகும்.

நாடு முழுவதும் இதுவரை செலுத்தப்பட்ட 143 கோடியே 83 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது.

இதில் நேற்று மட்டும் 63,91,282 டோஸ் தடுப்பூசிகள் அடங்கும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி, நேற்று 11,99,252 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.மொத்த பரிசோதனை எண்ணிக்கை 67.64 கோடியாக உயர்ந்துள்ளது.