சுவிட்சர்லாந்துக்குள் நுழையும் யாரும் இன்று முதல் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை என அந்நாடு அறிவித்துள்ளது.
ஒமிக்ரோன் வகை கோவிட் வைரஸ் பரவலைத் தொடர்ந்து பல நாடுகள் கட்டுப்பாடுகளை அதிகமாக்கி வரும் நிலையில், சுவிட்சர்லாந்து இப்படி அறிவித்துள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.
ஆனால், ஒரு பக்கம் சுவிட்சர்லாந்துக்குள் நுழையும் கட்டுப்பாடு நீக்கப்பட்டது போல் தோன்றினாலும், அதற்கும் காரணம் உள்ளது.
அதாவது, இப்போது பனிச்சறுக்கு விளையாட்டு பருவநிலையாகும். ஏற்கனவே கோவிட் கட்டுப்பாடுகளால் பனிச்சறுக்கு உல்லாச விடுதிகள் பலத்த அடிவாங்கிவிட்டன.
அப்படி இருக்கும் நிலையில், அதற்கு இப்போதும் கட்டுப்பாடு விதித்தால் அத்துறை சந்திக்கும் இழப்பு பெரியதாக இருக்கும். ஆக, இந்த அறிவிப்பால் சுற்றுலாத்துறைக்குப் பெரிய லாபம் கிடைக்கும்.
ஆனால், கோவிட் பல்வேறு ரூபங்களில் புதிது புதிதாக மரபணு மாற்றங்களைப் பெற்று அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் கட்டுப்பாடுகளை நெகிழ்த்தினால் மக்கள் நிலைமை என்ன ஆவது?
ஆகவே, ஒரு பக்கம் தனிமைப்படுத்தல் விதிகளை விலக்கிக் கொண்டுள்ள சுவிட்சர்லாந்து, மறுபக்கம் வேறு சில கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது. டிசம்பர், அதாவது இம்மாதம் 6ஆம் திகதி முதல், கோவிட் சான்றிதழ் தேவை என்னும் கட்டுப்பாடு நீட்டிக்கப்பட உள்ளது.
அன்டிஜன் கோவிட் பரிசோதனைகள் செல்லத்தக்கக் காலகட்டம் குறைக்கப்படுதல் மற்றும் முகக்கவசம் அணிதல் தேவையை விஸ்தாரமாக்குதல் ஆகிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட உள்ளன.
அத்துடன் இன்று முதல், சுவிட்சர்லாந்தின் தனிமைப்படுத்தல் பட்டியலிலிருந்த அனைத்து நாடுகளும், பிரித்தானியா, அவுஸ்திரேலியா, நெதர்லாந்து மற்றும் டென்மார்க் உட்பட, தனிமைப்படுத்தல் பட்டியலிலிருந்து நீக்கப்படுகின்றன.
சுவிஸ் அரசு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், சுவிட்சர்லாந்தின் தனிமைப்படுத்தல் பட்டியலிலிருந்த அனைத்து நாடுகளும், சனிக்கிழமை முதல், தனிமைப்படுத்தல் பட்டியலிலிருந்து நீக்கப்படுகின்றன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், சுவிட்சர்லாந்துக்குள் நுழையும் யாரென்றாலும், பிசிஆர் முறையிலான கோவிட் பரிசோதனை செய்து தங்களுக்கு கோவிட் இல்லை என்பதற்கான ஆதாரத்தைச் சமர்ப்பிக்கவேண்டும். (அருகிலுள்ள நாடுகளாகிய ஆஸ்திரியா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி மற்றும் Liechtenstein ஆகிய நாடுகளின் சில பகுதிகளிலிருந்து சுவிட்சர்லாந்துக்குள் எல்லை தாண்டி நுழைவோருக்கு மட்டும் விதிவிலக்கு).
அதுவும், இனி சுவிட்சர்லாந்துக்கு வருவோர், இரண்டு கோவிட் பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டியிருக்கும். ஒன்று, சுவிட்சர்லாந்துக்குள் நுழைவதற்கு முன், மற்றொன்று, சுவிட்சர்லாந்துக்குள் நுழைந்த நான்காவது நாளிலிருந்து ஏழாவது நாளுக்குள் மேற்கொள்ள வேண்டும்.
இந்தக் கட்டுப்பாடு அனைத்துப் பயணிகளுக்கும் பொருந்தும். அவர்கள் தடுப்பூசி பெற்றிருந்தாலும் சரி, தடுப்பூசி பெறவில்லையென்றாலும் சரி முடிந்தவரையில், புதிய வகை ஓமிக்ரோன் மரபணு மாற்ற கோவிட் வைரசை சுவிட்சர்லாந்துக்குள் கொண்டு வருவதைத் தடுப்பதற்காக, சுவிட்சர்லாந்துக்குள் நுழையும் அனைவருக்கும் கோவிட் பரிசோதனை செய்தல் தேவை கடுமையாக்கப்படுகிறது.
இந்த கட்டுப்பாடு, தடுப்பூசி பெற்றவர்களுக்கும், கோவிட்டிலிருந்து விடுபட்டவர்களுக்கும் கூட பொருந்தும் என்கிறது அரசின் அறிவிப்பு. அத்துடன், கோவிட் பரிசோதனைகளுக்கான செலவையும் பயணிகளே ஏற்கவேண்டும்.
ஒரு முக்கிய அறிவிப்பு
சுவிஸ் எல்லையில் அமைந்துள்ள நாடுகளில், கீழ்க்கண்ட பகுதிகளிலிருந்து சுவிட்சர்லாந்துக்குப் பயணிப்போருக்கு கோவிட் பரிசோதனை கட்டுப்பாடு கிடையாது.
ஜேர்மனி: Baden-Württemberg மற்றும் பவேரியா
பிரான்ஸ்: Grand-Est, Bourgogne / Franche Comté மற்றும் Auvergne / Rhône-Alpes.
இத்தாலி: Piedmont, Aosta Valley, Lombardy மற்றும் Trentino / South Tyrol பகுதிகள்.
ஆஸ்திரியா: Land Tirol மற்றும் Land Vorarlberg
Liechtenstein: முழுமையும்
தனிமைப்படுத்தல் விதிகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஏற்கனவே தனிமைப்படுத்தலிலிருப்பவர்கள், தனிமைப்படுத்தலிலிருந்து வெளியேறலாம்.
ஆனால், நான்காவது நாள் முதல் ஏழாவது நாளுக்குள் செய்யப்படும் கோவிட் பரிசோதனையை அவர்கள் கட்டாயம் செய்துகொள்ளவேண்டும்.
மேலும், அபாய பகுதிகள் எனக் கருதப்படும் ஐரோப்பாவின் ஷெங்கன் திறந்த எல்லைப் பகுதிகளிலிருந்து வரும் தடுப்பூசி பெறாத வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் சுவிட்சர்லாந்துக்குள் இனி நுழைய முடியாது.
2022இலும் கோவிட் தடுப்பூசிகள் இலவசமாகவும், எளிதாகவும் கிடைக்கும் என சுவிஸ் அரசு அறிவித்துள்ளது. தற்போதைக்கு, இந்த புதிய கட்டுப்பாடுகள் 2022 ஜனவரி 24 வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.