ஜெர்மனியில் தீவிரமடையும் கொரோனோ தொற்று!

ஜேர்மனியில் கொரோனா சூழல் மிகவும் மோசமடைந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மட்டுமே 37,682 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் கொரோனா பரவல் தொடங்கியதிலிருந்து, ஒரே நாளில் இத்தனை பேருக்கு புதிதாக கொரோனா கண்டறியப்படுள்ளது கடந்த ஞாயிற்றுக்கிழமைதான்!

அக்டோபர் மாதத்தின் நடுப்பகுதியிலிருந்து கொரோனா தொற்றும், கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளன.

நேற்றைய நிலவரப்படி, ஏழு நாட்களில் 100,000 பேரில் எத்தனை பேருக்கு புதிதாக கண்டறியப்பட்டுள்ளது என்ற எண்ணிக்கை 289இலிருந்து 303ஆக உயர்ந்துள்ளதாக Robert Koch நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேபோல், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 43 உயர்ந்து 97,715ஆக உயர்ந்துள்ளது.

ஜேர்மனியின் மிகப்பெரிய மருத்துவர்கள் கூட்டமைப்பின் தலைவரான Marburger Bund என்பவர், வரும் வாரங்களில், தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகும் என்பதால், நோயாளிகளை இடம் இருக்கும் மருத்துவமனைகளுக்கு மாற்றும் ஒரு சூழல் உருவாகலாம் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், கிறிஸ்துமஸ் நேரத்தில் மருத்துவமனைகள் நிரம்பி வழியும் நிலை உருவானால் அதை எதிர்கொள்வதற்காகவும், முதியோர் இல்லங்கள் மற்றும் மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி வழங்குவதற்காகவும், கொரோனா பரிசோதனைகள் செய்வதற்காகவும், ஜேர்மன் இராணுவம் 12,000 இராணுவ வீரர்களை தயார் செய்துவருகிறது.

இதுவரை 630 இராணுவ வீரர்கள் இந்த பணிகளுக்காக நியமிக்கப்பட்டுவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஜேர்மனியில், மீண்டும் வீட்டிலிருந்தவண்ணம் வேலை முதலான கொரோனா கட்டுப்பாடுகள் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.