முல்லைத்தீவில் முன்னாள் போராளி ஒருவர் மோட்டார் சைக்கிளின் இருக்கைக்கு அடியில் வெடிபொருட்களை மறைத்து எடுத்துச் சென்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வெடிபொருட்களை பயன்படுத்தி தாக்குதல் திட்டமிடப்பட்டதா என்பது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருக்கு பலத்த சந்தேகம் எழுந்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்களை மேற்கோள் காட்டி, செய்திகள் வெளியாகியுள்ளன.
கைதானவர் முல்லைத்தீவில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி மோட்டார் சைக்கிளில் 200 கிராம் அதிசக்தி வாய்ந்த வெடிபொருட்களுடன் பயணித்துள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மெழுகு பையில் சுற்றப்பட்டு நன்கு பொதி செய்யப்பட்டு, புதைக்கப்பட்டிருந்த அந்த வெடிபொருட்களை சந்தேகநபர் எடுத்துச் சென்றதாகவும், வெடிபொருட்கள் இருந்த இடம் தொடர்பில், சந்தேக நபர் சரியான தகவல்களை வழங்கத் தவறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கைதானவர் வெடிபொருட்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஏழு நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.