என் தாயை அடிக்கிறியா?. உன் பெற்றோரை என்ன செய்றேன் பாருடா தகப்பா.. தாத்தா – பாட்டியை உயிருடன் கொளுத்தி கொலை செய்த பேரன்.! வெளியான தகவல்!

தனது தாயை தந்தை அடித்ததால், தந்தையின் பெற்றோரை மகன் உயிருடன் எரித்துக்கொலை செய்த பரபரப்பு சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் கொத்தம்பாடி பகுதியை சார்ந்தவர் காட்டுராஜா (வயது 75). இவர் விவசாய கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி காசியம்மாள் (வயது 65). இவர்கள் இருவரும் கூரை வீட்டில் வசித்து வருகின்றனர். காட்டுராஜா – காசியம்மாள் தம்பதிக்கு தேசிங்கு ராஜா, மணி மற்றும் குமார் என 3 மகன்கள் உள்ளனர்.

இவர்களில் தேசிங்கு ராஜா (வயது 51) திமுகவில் நிர்வாகியாக இருக்கிறார். இவரது மனைவி ராணி. தேசிங்கு ராஜா கொத்தம்பாடி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும் ஆவார். இன்று காலை 2.30 மணியளவில் காட்டுராஜா – காசியம்மாள் வசித்து வரும் கூரை வீடு தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் காப்பாற்ற முயற்சித்தும் பலனில்லை. மேலும், வீடு வெளிப்புறமாக தாழிடப்பட்டு பெட்ரோல் ஊற்றப்பட்டதும் புரியவந்த நிலையில், கூரை வீட்டில் மளமளவென பற்றி எரிந்த தீயில் சிக்கி இருவரும் பரிதாபமாக பலியாகினர்.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் பல முயற்சிகள் மேற்கொண்டும் அனைத்தும் பொய்த்துபோனது. காட்டுராஜா தீயில் கருகி கரிக்கட்டையாக, காசியம்மாள் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபினவ் ஸ்ரீ, ஆத்தூர் காவல் காண்காணிப்பாளர் இமானுவேல் ஞானசேகரன் ஆகியோர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், காட்டுராஜாவின் 3 ஆவது மகன் குமாரின் 16 வயது மகன் வீட்டினை பூட்டி தீ வைத்து தாத்தா – பாட்டியை உயிருடன் எரித்து கொலை செய்தது அம்பலமானது.

மேலும், விசாரணையில் குமார் தனது மனைவியை தினமும் அடித்து துன்புறுத்தி வந்த நிலையில், குமாரின் 16 வயது மகன் தாயை அடிப்பதை கண்டித்து இருக்கிறார். மேலும், எனது தாயை நீ அடிக்கிறாய். உனது பெற்றோரை என்ன செய்கிறேன் என்று பார் எனக்கூறி வீட்டினை கொளுத்தியது அம்பலமானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சிறுவனை கைது செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.