தொடர்ந்தும் நாங்கள் ஆதரவாக இருப்போம்!

இலங்கை மற்றும் உலகளவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களது உறவுகளுக்கு ஆதரவாக இருப்போம் என்று ஐ.நா. வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ளும் முயற்சியில் அவர்கள் நம்பிக்கை மற்றும் விரக்திக்கு மத்தியில் காத்திருக்கிறார்கள்.

சில நேரங்களில் பல ஆண்டுகளாக, தங்கள் அன்புக்குரியவர்கள் இருக்கும் இடம் பற்றிய செய்திகளுக்காக உறவினர்களும் குடும்பமும் காத்திருக்கிருக்கின்றனர்.

இந்த நிலையில், உண்மையை கண்டறிவதற்கான தேடல் அவர்களை ஆபத்துக்குள்ளாக்கும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் நண்பர்களும் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்கிறார்கள்.

குறிப்பாக குறித்த போராட்டத்தில் பெரும்பாலும் பெண்களே ஈடுபடும் நிலையில் அவர்கள் மிரட்டல், துன்புறுத்தல் மற்றும் பழிவாங்கல்களை சந்திக்க நேரிடும் சந்தர்ப்பங்கள் அதிகமாகியிருக்கின்றன.

பாதுகாப்பின்மை உணர்வு காணாமல் போனவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமல்ல, அவர்களின் சமூகங்கள் மற்றும் அனைத்து சமுதாயத்தையும் பாதிக்கிறது என்றும் அவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.