பிரான்ஸில் பெற்ற மகனை கொன்ற தந்தை!

பிரான்ஸ் தலைநகரில் குடும்ப வன்முறை காரணமாக தந்தையால் 7 வயது மகன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் புறநகர பகுதியான செய்ன்-சன்-துனி மாவட்டத்திற்கு Villemomble பகுதியில் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்றுதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் அங்குள்ள வீடு ஒன்றில் கெவின் என அழைக்கப்படும் ஏழு வயது சிறுவன் ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் சோபா இருக்கையில் சடலமாக கிடந்துள்ளதை அவதானித்துள்ளனர்.

தலையில் சுடப்பட்டு குறித்த சிறுவன் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. சம்பவதினத்தன்று சிறுவனின் தாயார் கோயிலுக்குச் சென்று வீடு திரும்பிய நிலையில், சிறுவனின் சடலத்தை கண்டு அதிர்ச்சியில் பொலிஸாரை அழைத்துள்ளார்.

இதையடுத்து விசாரணைகளை தொடர்ந்த அதிகாரிகள், வீட்டின் மற்றுமொரு அறையில் சிறுவனின் தந்தை தற்கொலைக்கு முயன்ற நிலையில் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். இந்நிலையில் 36 வயதுடைய சிறுவனின் தந்தை தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தந்தையே மகனை சுட்டுக்கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சிறுவனின் தந்தை இம்மாத ஆரம்பத்திலேயே சிறையில் இருந்து விடுதலையாகியிருந்தார்.

மனைவியுடனான குடும்ப தகராரின் முடிவிலேயே இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாகவும் , இந்த தம்பதி ஒரே வீட்டில் வாழ்ந்த போது தொடர்ந்து தகராரில் ஈடுபடுவதாக அயலவர்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் 7 வயதான குறித்த பாலகன் கொல்லப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.