ஆட்சியை கைப்பற்றிய நிலையில் பெயர் மாற்றம் செய்த தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், ஆப்கனுக்கு இஸ்லாமிக் எமிரேட் ஆப் ஆப்கானிஸ்தான் (IEA) என தலிபான்கள் பெயர் மாற்றம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

அமெரிக்காவில் கடந்த 2001ம் ஆண்டு இரட்டை கோபுர தாக்குதல் நிகழ்த்தப்பட்டதற்கு பிறகு, ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா ராணுவம் புகுந்தது. தலிபான்களை எதிர்கொள்ள பில்லியன் டாலர் கணக்கில் பணத்தை வாரி இரைத்தது. 2011ம் ஆண்டு 1,10,000 துருப்புகள் வரை ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா களமிறக்கியிருந்த நிலையில், பின்னர் படிப்படியாக, தங்கள் நாட்டு துருப்புகளை அமெரிக்கா குறைத்தது.

குறிப்பாக, செப்டம்பர் 11ம் திகதிக்குள் ஒட்டுமொத்த அமெரிக்க படைகளையும் ஆப்கனில் இருந்து வெளியேற்ற அதிபர் ஜோ பைடன் திட்டமிட்டுள்ளார். இதனைப் பயன்படுத்தி ஒவ்வொரு நகரங்களாக தலிபான்கள் கைப்பற்றி வருகின்றனர்.

நேற்று தலைநகர் காபூலை சுற்றி வளைத்த தலிபான்கள், ஆட்சியைக் கைப்பற்றினர். இதனால், ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி மற்றும் துணை அதிபர்கள் நாட்டை விட்டு வெளியேறி, தஜகஸ்தானில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

அத்துடன் அதிபர் மாளிகையை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், போர் முடிவுக்கு வருவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டனர். இந்த நிலையில், ஆப்கன் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியதால், உயிர் பலி அச்சத்தால், மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

அதோடு, ஆப்கன் வான்வழியை பயன்படுத்த வேண்டாம் என்று யுனைடெட் ஏர்லைன்ஸ், பிரிட்டீஸ் ஏர்வேஸ், விர்ஜின் அட்லாண்டிக் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் முடிவு எடுத்துள்ளன.

மேலும், அதிபர் மாளிகையை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், ஆப்கானிஸ்தான் என்ற பெயரை இஸ்லாமிக் எமிரேட் ஆப் ஆப்கானிஸ்தான் என மாற்றியுள்ளனர்.

அதேவேளையில், இடைக்கால ஆப்கன் அதிபராக தலிபான்களின் அரசியல் பிரிவின் தலைவர் முல்லா அப்துல் கனி பரதார் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.