கதையை திருடியதாக கங்கனா மீது வழக்கு

தமிழில் தாம்தூம் படத்தில் கதாநாயகியாக வந்த கங்கனா ரணாவத் தற்போது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை கதையான தலைவி படத்தில் நடித்து இருக்கிறார். இந்திராகாந்தி வாழ்க்கை கதையான எமர்ஜென்சி படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை அவரே இயக்கவும் செய்கிறார்.

இந்த நிலையில் 2019-ல் திரைக்கு வந்து வரவேற்பை பெற்ற மணிகர்னிகா சரித்திர படத்தின் 2-ம் பாகத்துக்கு திரைக்கதை எழுதி இயக்கப்போவதாக சமீபத்தில் கங்கனா ரணாவத் அறிவித்தார். மணிகர்னிகா ஜான்சி ராணியின் வாழ்க்கை கதையாக தயாராகி இருந்தது. இதில் ஜான்சி ராணி வேடத்தில் கங்கனா நடித்து இருந்தார்.

மணிகர்னிகா படத்தின் 2-ம் பாகத்தை படமாக்க எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த படத்துக்கான கதையை தனது புத்தகத்தில் இருந்து கங்கனா திருடி விட்டதாக எழுத்தாளர் ஆஷிஷ் கவுல் என்பவர் மும்பை போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து கங்கனா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதை எதிர்த்து கங்கனா ரணாவத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். படப்பிடிப்பை தொடங்காத நிலையில் வழக்குப்பதிவு செய்து இருப்பது தவறு. வரலாற்று கதையை யார் வேண்டுமானாலும் படமாக்கலாம் என்று மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.