இலங்கையை வொயிட் வாஷ் செய்த இங்கிலாந்து! மோசமான தோல்வி

இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் இலங்கை அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது.

இலங்கை அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில், கடந்த 23-ஆம் திகதி முதல் விளையாடி வருகிறது.

இதில் 23-ஆம் திகதி நடைபெற்ற முதல் மற்றும் 24-ஆம் திகதி நடைபெற்ற 2-வது டி20-யில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளுக்கிடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று Southampton-னில் நடைபெற்றது.

அதன் படி முதலில் ஆடிய நியூசிலாந்து அணிக்கு துவக்க வீரர் பேர்ஸ்டோவ் மற்றும் டேவிட் மலான் சிறப்பான ஆட்டத்தை கொடுக்க நியூசிலாந்து அணி ஒரு வலுவான இலக்கை அடைந்தது.

இதில் பேர்ஸ்டோவ் 51 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும், டேவிட் மலான் 76 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆக, அடுத்த வந்த வீரர்கள் அடித்து ஆட முற்பட்டு சொற்ப ஓட்டங்களில் பவுலியன் திரும்ப, இங்கிலாந்து அணி இறுதியாக 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 180 ஓட்டங்கள் குவித்தது.

இலங்கை அணி வேகப்பந்து வீச்சாளர் இசுரு உடானா 4 ஓவர்கள் வீசி, 1 விக்கெட்டை மட்டும் வீழ்த்தி, 55 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்தார். இதனால் இலங்கை ரசிகர்கள் உடானாவை இணையத்தில் விமர்சித்து வருகின்றனர்.

181 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, இங்கிலாந்தின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, வெறும் 91 ஓட்டங்கள் மட்டும் எடுத்து, 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை பதிவு செய்தது.

இலங்கை அணியில் அதிகபட்சமாக பினுரா பெர்னாண்டோ 20 ஓட்டமும், ஓசாடா பெர்னாண்டோ 19 ஓட்டங்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து அணி 3-0 என வென்று வொயிட் வாஷ் செய்துள்ளது.