எலிசபெத் ராணியுடன் ஜோபைடன் சந்திப்பு

ஜி-7 நாடுகள் கூட்டமைப்பின் 47-வது மாநாடு இங்கிலாந்தில் நடந்தது. கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த மாநாடு நேற்று நிறைவு பெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் அமைப்பின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் பிரதமர் மோடி காணொலி மூலம் பங்கேற்று பேசினார்.

3 நாள் நடந்த இந்த மாநாட்டில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அமெரிக்க அதிபர் ஜோபைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசிகள் வழங்குவது, பருவநிலை மாற்றத்திலிருந்து உலகை பாதுகாப்பது போன்றவை இந்த மாநாட்டின் முக்கிய அம்சங்களாக இருந்தன.

இங்கிலாந்து ராணி எலிசபெத்தும் இந்த மாநாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அவரை ஜி-7 மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள் சந்தித்து பேசுவதில் ஆர்வமாக இருந்தனர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்காவில் இருந்து விமானத்தில் இங்கிலாந்து புறப்படும் போதே எலிசபெத் ராணியை சந்திக்க ஆர்வமாக இருப்பதாக கூறினார். அவர் என் அம்மாவின் தோற்றத்தில் இருக்கிறார் என்று புகழ்ந்தார்.

இங்கிலாந்து வந்த ஜோபைடன் மாநாடு முடிந்ததும் எலிசபெத் ராணியை நேரில் சந்திக்க திட்டமிட்டு இருந்தார். முன்னதாக மாநாட்டுக்கு வந்திருந்த உலக தலைவர்கள் அனைவரும் சந்தித்து கொண்டனர்.

பின்னர் ஜோபைடன் தனது மனைவியுடன் சென்று இங்கிலாந்து ராணி எலிசபெத்தை அரண்மனையில் சந்தித்தார். பின்னர் அவர்கள் அரண்மனையின் வெளியே மாடங்களுக்கு இடையே உள்ள நடைபாதையில் பேசிக்கொண்டே நடந்து சென்றனர். நேற்று இந்த சந்திப்பு நடந்தது.

ராணி எலிசபெத்தின் மகன் சார்லஸ் அவரது மனைவி கமிலா ஆகியோருடனும் உரையாடினார்கள். எலிசபெத் ராணியுடனான சந்திப்பு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக ஜோபைடன் தெரிவித்தார்.