ஆப்கானில் அடுத்தடுத்து 2 பேருந்துகளில் குண்டுவெடிப்பு.!!

ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக தலைநகர் காபூலில் அடிக்கடி பயங்கரவாத தாக்குதல்கள் நிகழ்த்தப்படுகின்றன.

இந்த நிலையில் காபூலின் மேற்குப் பகுதியில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஹசாரா நகரில் உள்ள ஒரு மசூதிக்கு அருகே பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தது. அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் பஸ்சில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் அந்தப் பகுதியே அதிர்ந்தது. அங்கு கரும்புகை மண்டலம் எழுந்தது.‌ குண்டு வெடிப்பில் சிக்கி 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 8 பேர் பலத்த காயமடைந்தனர்.

இந்த குண்டு வெடிப்பு நடந்த சில மணி நேரத்துக்குள் அதே பகுதியில் மற்றொரு பஸ்சில் குண்டு வெடித்தது. இதில் 4 பேர் உடல் சிதறி பலியாகினர். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.‌ அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்புகளால் ஹசாரா நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனிடையே இந்த 2 குண்டு வெடிப்புகளிலும் படுகாயமடைந்த 14 பேர் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. இந்த 2 குண்டுவெடிப்புகளுக்கும் உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதற்கு முன்பு ஷியா பிரிவு முஸ்லிம்களை குறிவைத்து நடத்தப்பட்ட பல தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருக்கிறது. எனவே இந்த தாக்குதல்களையும் அவர்களே நடத்தி இருப்பார்கள் என நம்பப்படுகிறது.