கொரோனா சோதனை செய்ய இளைஞரை அடித்து, இழுத்து சென்ற கொடூரம்…

கொரோனா பரிசோதனை செய்துகொள்ள கூறி இளைஞர் ஒருவரை ஊழியர்கள் கொடுமை படுத்திய வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. அதேபோல் பல இடங்களில் கொரோனா பரிசோதனையும் நடத்தப்பட்டுவருகிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் சிக்பேட் என்ற பகுதியில் அமைந்துள்ள கோவில் ஒன்றின் முன்பாக கொரோனா பரிசோதனை செய்யும் குழுவினர் அந்த பகுதி மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்துவந்தனர்.

அப்போது அந்த பகுதியாக வந்த இரண்டு இளைஞர்களை அவர்கள் கொரோனா பரிசோதனை செய்யுமாறு வற்புறுத்தியுள்ளனர்.

ஆனால் அந்த இளைஞர்கள் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே, இறுதியில் இரண்டு தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இறுதியில் அங்கிருந்த ஊழியர்கள் சிலர் அந்த இளைஞரை தரதரவென இழுத்துச்சென்று, அவரை கொடுமையாக தாக்கியும், கைகளை முறுக்கியும் கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிலர் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட, இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.