இராணுவம் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அழித்தாலும் நாம் நினைவுகூர்வதை நிறுத்தப் போவதில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவு துாபி உடைக்கப்பட்டமை குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இதனை அவர் குறிப்பிட்டிருந்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
மே 18 நாளை போரில் உயிரிழந்த மக்கள் நினைவு நாளாக அனுசரித்து வருகிறார்கள் முள்ளிவாய்க்காலில் ஒரு இடத்தினை தெரிவு செய்து அந்த இடத்தில் ஒரு நினைவிடத்தை தயார் செய்து மே மாதம் 18ஆம் திகதி அந்த நினைவு நாளை உயிர்களைபறி கொடுத்தவர்கள் தங்களுடைய அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள்.
ஒவ்வொரு வருடமும் இந்த நிகழ்வு வழமைபோல் இடம்பெற்று வருகின்றது. இம்முறையும் அவ்வாறான ஒரு நிகழ்ச்சிக்கான ஒழுங்குகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
அதனை விட ஒரு நிரந்தரமான நடுகல் ஒன்றும் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நடுவதற்கும் சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுத்திருந்ததை நாங்கள் அறிந்திருக்கின்றோம்.
ஆனால் கடந்த 12ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் அந்தப் பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு ஏற்கனவே இருந்த நினைவுச்சின்னங்களின் மேற்பகுதிகள் சிதைக்கப்பட்டுள்ளது.
அதற்கு மேலாக பெரிய எடைகொண்ட நடுகல் ஒன்று நாட்டுவதற்காக வைக்கப்பட்டு இருந்த போதிலும் அதனை திருடிச் செல்லப்பட்டு விட்டது. அது தற்போது எங்கே இருக்கின்றது என தெரியவில்லை.
எனினும் இவ்வருட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை தற்போதுள்ள கொரோனா நிலைமையினை அனுசரித்து சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தல்களை ஏற்றுக்கொண்டு மிக அவதானமாக அதனை செயற்படுத்துவதற்கு தயாராக இருக்கிறோம்.
ஏற்கனவே போரினால் உயிரிழந்தது போல் வடக்கில் அவ்வாறான நிலை மீண்டும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருக்கின்றோம்.
எனவே இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை வழமை போன்று நாம் அனைவரும் ஒன்றுபட்டு நினைவு கூருவோம். அத்தோடு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நினைவு கூர ஆயர்கள் இணைந்து அழைப்பு விடுத்துள்ளமை தமிழ் தேச மக்களுக்கு ஒரு எழுச்சி மிக்கதாக காணப்படுகின்றது.
எனவே தற்போதுள்ள நிலைமையை அனுசரித்து முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வினை நடாத்துவோம் என்றார்.