மே-18 மாலை 6:10 மணிக்கு வீடுகளில் எழுச்சிச் சுடரேற்ற வேண்டும்! விழுந்ததெல்லாம் அழுவதற்கல்ல; எழுவதற்கே! சீமான்

மே-18, இன எழுச்சி நாளை முன்னிட்டு அன்று மாலை 6:10 மணியளவில் வீடுகளில் எழுச்சிச் சுடரேற்ற வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறைகூவல் விடுத்துள்ளார்.

இதுதொடர்பில் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் முக்கிய அம்சங்கள், சிங்களப்பேரினவாதம் இந்திய வல்லாதிக்கத்தின் உதவியோடும், உலக நாடுகளின் துணையோடும் ஈழ நிலத்தில் நடத்திய கோர இனப்படுகொலை முற்றாக முடிவுற்று, 2 இலட்சம் தமிழர்களை மொத்தமாகச் சாகக்கொடுத்து 11 ஆண்டுகளைக் கடந்துவிட்டோம்.

எவ்விடத்தில் தமிழர்கள் முடிவுற்றதாக சிங்களப் பேரினவாதமும், பன்னாட்டுச்சமூகமும் கருதியதோ அவ்விடத்திலேயே, ‘வீழ்வோம் என்று நினைத்தீரோ?’ என்று கேள்வி எழுப்பி, ‘விழ விழ எழுவோம்! ஒன்று விழ ஒன்பதாய் எழுவோம்! விழுந்ததெல்லாம் அழுவதற்கல்ல; எழுவதற்கே!’ எனும் இன மீட்சி முழக்கத்தை முன் வைத்து தமிழ்த்தேசிய இனம் மீண்டெழுந்து தாயகக்கனவை சாத்தியப்படுத்த வேண்டியது காலக்கடமையாகிறது.


வரும் மே-18 அன்று மாலை சரியாக 6:10 மணியளவில் உறவுகள் அவரவர் வீடுகளில் எழுச்சிச் சுடரேற்றி, இன மீட்சிக்கு உறுதிமொழியேற்று, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிரிழந்த உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுக்க வேண்டுமென உலகத்தமிழர்களுக்கு அறைகூவல் விடுக்கிறேன்.

அத்துயரினை நினைவுகூறும் வகையில் நினைவேந்தல் நிகழ்வின்போது, உப்பில்லா கஞ்சியைக் காய்ச்சி அதனை உண்டு, மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

உள்ளத்தில் அணையா பெருநெருப்பாய் பற்றியெரியும் இன உணர்வினை அடைகாத்து அதனை மற்றவருக்கும் பற்ற வைத்து இன விடுதலையை வென்றெடுக்கச் சூளுரைப்போம்!

இலக்கு ஒன்றுதான்; இனத்தின் விடுதலை! இனம் ஒன்றாவோம்; இலக்கை வென்றாவோம்! தமிழர்களின் தாகம்! தமிழீழத்தாயகம் என சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.