கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்த சர்வகட்சி மாநாட்டை கூட்டும்படி எதிர்கட்சியினர் விடுத்த கோரிக்கையை ஸ்ரீலங்காவின் ஆளுங்கட்சி நிராகரித்துள்ளது. கட்சி சார்பான யோசனைகள் இருந்தால் நேரடியாக அரச தலைவர் கோட்டாபயவை சந்தித்து முன்வைக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஸ்ரீலங்காவில் உக்கிரமடைந்து வரும் கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க கட்சித் தலைவர்களை கூட்டி பேச்சு நடத்த வேண்டும் என எதிர்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். எனினும் அந்த யோசனையை தாம் முற்றாக நிராகரிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தரான அமைச்சர் நாமல் ராஜபக்ச கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
எதிர்கட்சி குற்றச்சாட்டுக்களை மாத்திரமே முன்வைத்து வருகின்றதே தவிர, குறைந்த பட்சம் தொற்றினை கட்டுப்படுத்த ஒத்துழைப்பதில்லை. கடந்த நாட்களாக தடுப்பூசி பற்றிய குற்றச்சாட்டை முன்வைத்து வந்தார்கள். ஆனால் இன்று தடுப்பூசி மீது நம்பிக்கை வைத்து பெற்றுக்கொள்கின்றார்கள். நாங்கள் இன்று ஒரு அரசியல் கட்சியாக ஒவ்வொரு வைத்தியசாலைகளுக்கும் நோயாளர் கட்டில்களை அளித்து வருகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.
இன்று பொதுமக்கள் ஒருபக்கமாக தொற்றினை கட்டுப்படுத்த ஒத்துழைப்பதோடு, தொற்றினை கட்டுப்படுத்தி மறுபக்கத்தில் பொருளாதார போரினையும் வெற்றிகொள்ள வேண்டும். அதற்கமைய தொற்றினைக்கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்து வருகின்றது. அதேவேளை, உலகிலுள்ள பிரதான மூன்று தடுப்பூசிகளை நாங்கள் பெற்று அவற்றை மக்களுக்கும் அளித்துவருகின்றோம்.
இந்த நிலையில் எதிர்வரும் சில தினங்களிற்குள் தடுப்பூசியைப் பெறுவோருக்கு இலத்திரனியல் தடுப்பூசி அடையாள அட்டையைப் பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோன்று இன்று சர்வ கட்சி மாநாட்டை நடத்துவதற்கான கோரிக்கையை எதிர்கட்சிகள் முன்வைத்து வருகின்றன.
அதனை நாங்கள் நிராகரிக்கின்றோம். தற்போதைய நிலைமையில் கருத்துக்கள், யோசனைகள் இருந்தால் எம்மையோ அல்லது அசர தலைவரையோ சந்தித்து முன்வைக்கலாமே தவிர, கூட்டங்களைக் கூட்டுவதால் பிரயோசனமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.