90 அடி ஆழமான ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன்!

ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 4 வயது சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில் உள்ள லாச்சிரி கிராமத்தில் வசித்து வரும் நாகாராம் தேவசி என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில், கடந்த 2 நாட்களுக்கு முன் 90 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டுள்ளது.

நேற்று மதியம் இந்த கிணற்றில் அவரது 4 வயது மகனான அனில் தேவசி தவறி விழுந்துவிட்டான்.

குழந்தை கிணற்றுக்குள் விழுந்தது குறித்து கிராம மக்களுக்கு தெரிய வந்ததும், உடனடியாக காவல்துறைக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதன்பிறகு குழந்தையை மீட்பதற்கு எடுக்கப்பட்ட முதல்கட்ட நடவடிக்கைகள் தோல்வி அடைந்ததால், தேசிய பேரிடர் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, லாச்சிரி கிராமத்திற்கு விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், குழந்தையை மீட்கும் நடவடிக்கையில் துரிதமாக இறங்கினர்.

கிணற்றுக்குள் 90 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கியிருப்பதால், அவனுடன் தொடர்பு கொள்வதற்காக கேமிரா ஒன்று உள்ளே இறக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறுவன் மயக்கம் அடையாமல் இருக்க குழாய் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது.

சிறுவனுடன் அதிகாரிகள் தொடர்ந்து பேசி வருகின்றனர். அவனுக்கு உணவும் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இரவு நேரம் ஆனதால் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு தற்போது வரை மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.