35 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் பெண் குழந்தை! லட்சம் ரூபாய் செலவு செய்து ஹெலிகாப்டரில் வரவேற்பளித்த குடும்பம்

ராஜஸ்தானில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்தில் பிறந்த முதல் பெண் குழந்தையை ஹெலிகாப்டரில் அழைத்துவந்து பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்து குழந்தையின் தாத்தா அசத்தியுள்ளார்.

ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவர், 35 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களது வீட்டில் பெண் குழந்தையை பிறந்ததை ஒரு மாவட்டமே வியக்கும் அளவுக்கு கொண்டாடியுள்ளார்.

வரவேற்புக்காக 4.5 லட்சம் ரூபாய் செலவு செய்து தனி ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து, அது தரையிரங்கள் பிரத்யேகமாக ஹெலிபேட் எல்லாம் அமைத்து அசத்தியுள்ளார்.

தங்கள் கிராமத்தில் முதன்முதலாக ஹெலிகாப்டர் இறங்குவதைக் கண்டு அப்பகுதி மக்கள் வியப்படைந்துள்ளனர். ஹனுமன்ராம் பிரஜாபத் தம்பதியினருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது.

2 மாதங்களாக தந்தை வழி தாத்தா வீட்டில் இருந்த குழந்தையை தாய் வழி தாத்தா மதன்லால் கும்ஹார் (Madan Lal Kumhar) தங்களது வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்துள்ளார்.

பிரம்மாண்டமாக குழந்தையை தன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என நினைத்த அவர், ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்ல மாவட்ட கலெக்டரிடம் அனுமதி வாங்கியுள்ளார்.

பின்னர், நாகூர் மாவட்டத்தில் உள்ள நிம்டி சண்டவாட்டா கிராமத்தில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்திலும், குழந்தை இருக்கும் தந்தைவழி தாதத்தாவுக்கு சொந்தமான இடத்திலும் பிரத்யேகமாக ஹெலிபேட் அமைத்துள்ளார். இருவரது வீட்டிற்கும் சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவு ஆகும்.

நிம்டி சண்டவாட்டா கிராமத்தில் மேலும் பல ஏற்பாடுகளையும் அவர் செய்து வைத்திருந்தார்.

35 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களது வம்சத்தில் பிறந்த முதல் பெண் குழந்தையை ஹெலிகாப்டரில் அழைத்து வந்த அவர், வீட்டிற்கு நடந்து செல்லும் பாதைகளில் மலர் தூவுவதற்கும் ஏற்பாடு செய்திருந்தார்.

பெண் குழந்தையை, தந்தை ஹனுமன்ராம் பிரஜாபத் கைகளில் ஏந்தி சென்றார். திருவிழாபோல் குழந்தைக்கு வரவேற்பு அளித்ததை அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியாக நேரில் கண்டுகளித்தனர்.

தங்கள் கிராமத்தில் முதன்முறையாக ஹெலிகாப்டர் வந்ததையையும் அவர்கள் நேரில் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர்.

இது குறித்து பேசிய மதன்லால் கும்ஹார், பெண் குழந்தை பிறப்பை நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் திருவிழா போல் கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பெண் குழந்தைகளுக்கான வரவேற்பு கொடுப்பதில் தான் ஒரு முன்மாதிரியை உருவாக்கியிருப்பதாக பெருமையுடன் கூறிய அவர், வரும் காலங்களிலும் தங்கள் வீடுகளில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு இதுபோன்ற வரவேற்பு அளிக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

30 கிலோ மீட்டர் தொலைவை ஹெலிகாப்டர் சுமார் 20 நிமிடத்தில் கடந்தது. பெண் குழந்தையை அழைத்துவருவதற்காக பிரத்யேகமாக செய்யப்பட்ட இந்த ஏற்பாடுக்கு சுமார் 4.5 லட்சம் ரூபாயை மதன்லால் குமார் செலவழித்துள்ளார்.