போதைப் பொருள் விவகாரம் தொடர்பில் இருவருக்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக , கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் பிற்பகல் ஒரு மணியளவில் , கொழும்பு – கிரேண்ட்பாஸ் பகுதியில் இடம்பெற்றதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவலோக்க விளையாட்டு மைதானத்திற்கு அருகில் ஐஸ் போதைப் பொருளை விலைக்கு பெற்றுக் கொள்வது தொடர்பில் உயிரிழந்த இளைஞனுக்கும் , சந்தேக நபருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
வாய்த்தர்க்கம் இருவருக்குமிடையில் மோதலாக மாறியதில் சந்தேக நபர் உயிரிழந்த இளைஞனின் கழுத்து பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கிய நிலையில் படுகாயமடைந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் சேதவத்த – வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கிரேண்ட்பாஸ் பொலிஸார் மேற்படி பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
மோதலின் போது சந்தேக நபரும் காயமடைந்துள்ள நிலையில் , அவர் தற்போது பொலிஸாரின் பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.







