பொடுகு தொல்லைக்கு நிரந்தர தீர்வு வேண்டுமா?

இன்றைய கால பல ஆண்களும் சரி பெண்களும் சரி பொடுகு பிரச்சினையால் அவதிப்படுவதுண்டு.

வறண்ட சருமம், ஹார்மோன்களின் அளவில் ஏற்படும் மாறுபாடு, பூஞ்சை போன்ற நுண்ணுயிரித் தொற்றுகள், மனஅழுத்தம், முறையற்ற உணவுப் பழக்கம், தலையைச் சுத்தமாகப் பராமரிக்காதது போன்றவை பொடுகுப் பிரச்னை உருவாக முக்கியக் காரணங்கள்.

பெரும்பாலான மக்கள் இரசயனம் கலந்த சோப்பு மற்றும் ஷாம்பூகள் பயன்படுத்துவதால் பொடுக்குத் தொல்லையை நீக்கலாம் என்று கருதுகின்றனர். ஆனால், இது முற்றிலும் தவறான கருத்து ஆகும்.

இதுவரை பொடுகுக்காக பல்வேறு விஷயங்களை நீங்கள் முயற்சித்துப் பார்த்திருக்கலாம். ஆனால் நம்முடைய வீட்டிலுள்ள சில பொருட்களை வைத்தே பொடுகை விரட்டிவிட முடியும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளைக்கருவைச் சேர்த்து அடித்து அதைத் தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். முட்டை நாற்றம் போக சீயக்காய் பயன்படுத்த வேண்டும். இதை வாரத்தில் இரண்டு நாள் வீதம் செய்து வந்தால் பொடுகுப் பிரச்சினை தீரும்.
  • வெந்தயம் இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து முதல் நாள் இரவே நீர் விட்டு ஊற வைக்க வேண்டும். அதை மறுநாள் காலை எடுத்து நன்றாக அரைத்து தலைமுடி மற்றும் மண்டை ஓட்டின்மீதும் படுமாறு தேய்க்க வேண்டும். அரை மணி நேரம் கழித்து முடியை நீரில் அலச வேண்டும்.
  • பசலைக்கீரையை மையாக அரைத்து தலையில் தேய்த்துக் குளிக்கலாம். இதை அவ்வப்போது செய்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.
  • வசம்பை தட்டிப்போட்டு தேங்காய் எண்ணெயில் ஊறப்போட்டு அடிக்கடி தலையில் தடவி வந்தாலும் பொடுகுத்தொல்லை சரியாகும்.
  • சோற்றுக்கற்றாழையின் ஜெல்லை தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளித்து வந்தாலும் பொடுகு நீங்கும். குளிக்கும்போது தேவைப்பட்டால் சீயக்காய் பயன்படுத்தலாம்.
  • எலுமிச்சைப் பழத்தை பிழிந்து அதன் சாற்றினால் தலையில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இதைச் செய்து 15-லிருந்து 20 நிமிடங்களுக்குப் பிறகு தலையை அலசலாம்.
  • கைப்பிடி வேப்ப இலையை எடுத்து, நன்றாக அரைத்து பேஸ்ட் போலச் செய்ய வேண்டும். அதை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரிலோ அல்லது சாதாரண நீரிலோ தலையைக் கழுவ வேண்டும்.
  • துளசி மற்றும் காய்ந்த நெல்லிக்காய்ப் பொடிகளை நீரில் கலந்து பசை போலச் செய்து தலையில் மசாஜ் செய்ய வேண்டும். அரை மணி நேரம் கழித்து தலையை அலச வேண்டும்