பொடுகு மற்றும் முடி உதிர்தல் பிரச்சனைக்கு தீர்வு வேண்டுமா?

இன்றைய காலத்தில் தலைமுடிக்கு கிடைக்க வேண்டிய சத்துக்கள் சரியான அளவில் கிடைக்காமல், தலைமுடி வலுவிழந்தும், ஆரோக்கியமிழந்தும் உள்ளது.

அதிக நேரம் ஏ.சி அறையில் இருப்பது, மன அழுத்தம், தவறான நேரத்தில் தூங்குவது போன்ற காரணங்களால் சீக்கிரத்தில் முடி கொட்டிவிடுகிறது.

அதுமட்டுமின்றி பொடுகு பிரச்சினையும் சேர்ந்தே வந்து விடுகின்றது. இதிலிருந்து விடுபட கண்ட கண்ட எண்ணெய்களையும் மருந்துகளையும் போடுவதை தவிர்த்து விட்டு இயற்கை முறையில் இதற்கு என்ன தீர்வு கிடைக்கும் என்பதை தெரிந்து கொண்டாலே போதும்.

அந்தவகையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண சமையலுக்கு பயன்படுத்தப்படும் கருப்பு மிளகையும் பயன்படுத்தலாம்.

இது கூந்தல் பிரச்சினைக்கு பெரிதும் உதவி புரிகின்றது. அது எப்படி என இங்கு பார்ப்போம்.

  • கருப்பு மிளகுடன் தயிர் கலந்து தலைமுடிக்கு மசாஜ் செய்துவிடலாம். கருப்பு மிளகில் செம்பு நிறைந்திருப்பதால் கூந்தல் முடி முன்கூட்டியே வெள்ளை நிறமாக மாறுவதை தடுக்கும்.
  • ஒரு கப் தயிருடன் 2 டீஸ்பூன் கருப்பு மிளகு தூள் கலந்து கொள்ளவும். அத்துடன் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு குழைத்துக்கொள்ளவும். அதனை உச்சந்தலையில் அழுத்தி தடவவும். பிறகு கூந்தல் முழுவதும் தடவி மசாஜ் செய்துவிட்டு அரை மணி நேரம் கழித்து கூந்தலை கழுவிவிடலாம். இது தலைமுடியை ஈரப்பதமாக்கும். மேலும் வைட்டமின் சி குறைபாட்டை போக்கும்.
  • ஒரு டீஸ்பூன் கருப்பு மிளகு தூளுடன் சிறிதளவு ஆலிவ் எண்ணெய் கலந்துகொள்ளவும். அதனுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளவும். அதனை உச்சந் தலையில் தடவிவிட்டு ஒரு மணி நேரம் கழித்து கழுவிவிடலாம். வாரம் இருமுறை செய்துவந்தால் பொடுகு தொல்லையில் இருந்து தப்பித்துவிடலாம்.
  • கருப்பு மிளகுடன் ஆலிவ் எண்ணெய்யை கலந்து காற்று புகாத பாட்டிலில் மூடி வைத்துக்கொள்ளவும். இரண்டு வாரங்களுக்கு பிறகு இந்த எண்ணெய்யை தலை முடியில் தடவிவிட்டு 30 நிமிடங்கள் கழித்து கழுவிவிடலாம். இது முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். ஆலிவ் எண்ணெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணெய்யையும் பயன்படுத்தலாம். அது தலைமுடியை பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.