கொரோனாவால் மரணத்தின் பிடியில் ஒரு நாடு..!! பெண்ணின் நேரடி அனுபவம்

பிரேசிலின் São Paulo நகரில் சில மாதங்கள் தங்கியிருக்க நேர்ந்த சுவிஸ் இளம்பெண் ஒருவர் கொரோனா தொடர்பில் நேரடி அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

பிரேசில் முழுவதும் கொரோனா வைரஸ் பிடியில் சிக்கியுள்ள நிலையில், São Paulo நகரம் அதிக உயிர் இழப்புகளை எதிர்கொண்டு வருகிறது.

இப்பகுதியில் கடந்த 10 மாதங்களாக தங்கியிருந்த சுவிட்சர்லாந்தின் லூசெர்ன் பகுதியை சேர்ந்த 23 வயது ரஃபேல்லா தமது நேரடி அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

பிப்ரவரி 25 ஆம் திகதி பிரேசிலில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவான நிலையில், பொதுமக்கள் எவரும் அதை கண்டுகொள்ளவில்லை எனவும், வழக்கம் போல அனைவரும் திருவிழா நாட்களை கொண்டாடியதாகவும் ரஃபேல்லா தெரிவித்துள்ளார்.

ஆனால் மார்ச் மாத பகுதியில் அனைத்தும் தலைகீழாக மாறியதாக கூறும் ரஃபேல்லா, பலரும் குடியிருப்பில் இருந்து வெளிவரவே அச்சப்பட்டனர் என்கிறார்.

பலரும் பயத்தில் என்ன செய்வது என தெரியாமல் தவித்ததாகவும், அங்காடிகளுக்கு செல்லவே பலர் அஞ்சியதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஜனாதிபதியிடம் இருந்து கொரோனா தொடர்பில் எந்த எச்சரிக்கையும் வெளியாகவில்லை எனவும், அவர் இதை வெறும் சாதாரண காய்ச்சல் என்றே இதுவரை கூறி வருவதாகவும் ரஃபேல்லா தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி பிரேசிலின் ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கு உகந்த கட்டுப்பாடுகளை விதித்ததும், தற்போது அதிக உயிரிழப்புகளை சந்திக்கும் நிலைக்கு ஒரு காரணம் என்றார் ரஃபேல்லா.

கொரோனா வைரஸ் தொடர்பில் பரப்புரை மேற்கொண்ட, ஊரடங்கு தேவை என வாதிட்ட São Paulo ஆளுநருக்கு இதனிடையே வெடிகுண்டு மிரட்டலும் விடுக்கப்பட்டது என்றார்.

இதனால் கட்டுப்பாடுகளை கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தும் நடவடிக்கையில் São Paulo ஆளுநர் இறங்கியுள்ளார்.

பிரேசில் நாட்டை பொறுத்தமட்டில் கொரோனா பிடியில் இருந்து மீண்டு வருவது மிகக்கடினம் என்பது மட்டுமல்ல, இதே நிலை நீடித்தால் பல ஆண்டுகள் வரை மக்கள் கொரோனாவுடன் போராடும் நிலை உருவாகலாம் என்கிறார் ரஃபேல்லா.