ஒரே நாளில் கொரோனாவுக்கு 1.83 லட்சம் பேர் பாதிப்பு..!!

கொரோனா பாதிப்பு உருவானதில் இருந்து முதல் முறையாக உலக அளவில் ஒரே நாளில் 1.83 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்து உள்ளது.

சீனாவின் வுஹானில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய இந்த ஆட்கொல்லி வைரஸ் உலக மக்களை இன்றும் அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது.

கொரோனாவின் பிடியில் உலக அளவில் அதிகமானோர் சிக்கிய மோசமான நாளாக நேற்று மாறியிருக்கிறது. ஒரேநாளில் மட்டும் உலக அளவில் 1 லட்சத்து 83 ஆயிரத்து 20 பேர் கொரோனா பாதிப்புக்கு இலக்கானதாக உலக சுகாதார நிறுவனம் கூறியிருக்கிறது.

ஒரே நாளில் இவ்வளவு அதிகம்பேர் தொற்றுக்கு ஆளானது இதுவே முதல் முறையாகும்.

இதில் 54,771 பேர் பிரேசில்வாசிகள். அடுத்ததாக 36,617 அமெரிக்கர்களும், 15,400 இந்தியர்களும் இந்த பட்டியலில் இடம்பெற்று இருக்கின்றனர்.

ஒட்டுமொத்தமாக இதுவரை உலக அளவில் 90 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவிடம் சிக்கி இருக்கின்றனர்.

இதில் பலியானவர்களின் எண்ணிக்கை மட்டும் 4.85 லட்சத்துக்கும் மேற்பட்டோர் என தெரியவந்துள்ளது.

பிரேசில், அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஏற்கனவே மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி சற்று ஓய்ந்திருந்த சீனா, தென்கொரியாவில் கூட மீண்டும் இந்த வைரஸ் தலைகாட்டி வருகிறது. சீனாவின் பீஜிங் நகரம் மீண்டும் கொரோனாவின் மையமாக மாறும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

கொரோனாவுக்கு ஒரே நாளில் 1.83 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதற்கு அதன் பரவல் வேகம் காரணமாக இருந்தாலும், உலக அளவில் சோதனைகள் அதிகரித்து வருவதால் இது வெளிச்சத்துக்கு வருகிறது எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இதற்கிடையே கொரோனாவின் பிடியில் இருந்து ஸ்பெயின் நாடு மெல்ல மெல்ல மீண்டு வருவதால் அங்கு அமல்படுத்தப்பட்டு இருந்த அவசரநிலை திரும்ப பெறப்பட்டு உள்ளது.

மேலும், மக்கள் நாடு முழுவதும் பயணம் மேற்கொள்ள அனுமதியும் வழங்கப்பட்டு உள்ளது. அங்கு இயல்பு நிலை கொண்டு வரப்பட்டாலும், வைரசின் 2-வது அலை வீசக்கூடும் என்பதால் மக்கள் அனைவரும் கூடுதல் விழிப்புடன் இருக்குமாறு பிரதமர் பெட்ரோ சாஞ்சேஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.