பூமியை நோக்கி வரும் பாரிய விண்கற்களால் ஏற்படும் ஆபத்து! முக்கிய செய்தி ….

இந்த ஆண்டு இதைவிட மோசமாக இருக்காது என்று நினைக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது, இன்னும் இந்த ஆண்டு என்ன செய்ய போகிறதோ என்ற பீதியில் இருந்தவர்களுக்கு, இந்த செய்தி சற்று கூடுதல் பீதியைக் கொடுக்கலாம். ஏனென்றால், பூமியை நோக்கி மூன்று புதிய விண்கற்கள் பயணம் செய்யத் துவங்கியுள்ளதில். இதில் மான்ஸ்டர் விண்கல் என்று கூறப்படும் மிகப்பெரிய விண்கல் நாளை பூமி நோக்கி நகர்கிறது.

நாசா வெளியிட்டுள்ள தகவல்

இந்த 2020 ஆம் வருடத்தில் கொரோனா ஒருபுறம் மக்களை பாடாய்ப் படுத்தி எடுத்து வருகிறது, இன்னொரு புறம் சில இடங்களில் பூகம்பம், கொடூரமான மழை மற்றும் புயல் என்று மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாக்கியுள்ளனர். இதெல்லாம் ஒரு புறம் இருக்க நாசா தற்பொழுது மூன்று புதிய விண்கற்கள் பூமியை நோக்கி பயணம் செய்யத் துவங்கியுள்ளது என்று அறிவித்துள்ளது. குறிப்பாக மான்ஸ்டர் விண்கல்லை ஆபத்தானது என்று கூறி, அது பற்றிய முழு விபரத்தையும் வெளியிட்டுள்ளது.

நாளை பூமியை நோக்கி வரும் எரிகல்

ஜூன் 6ம் தேதி துவங்கி இந்த விண்கற்கள் பூமியை நோக்கி வருகிறது என்று நாசாவின் நியர் எர்த் ஆப்ஜெக்ட் ப்ரௌசர் (NASA’s Near-Earth Object Browser) அறிவித்துள்ளது. இந்த விண்கற்கள் பூமிக்கு எவ்வளவு அருகில் பயணிக்கவுள்ளது, இதனால் பூமிக்கும், மனிதர்களுக்கும் ஏதேனும் ஆபத்து இருக்கிறதா என்று நாசா தெளிவாக விளக்கம் அளித்துள்ளது. இந்த மூன்று விண்கற்களின் பயணத் தகவலை இப்பொழுது தெரிந்துகொள்ளலாம்.

சிறுகோள் 2002 NN4 (ASTEROID 2002 NN4)

மாமத் (mammoth) விண்வெளி எரிகல் என்று அழைக்கப்படும் இந்த ராட்சஸ விண்கல்லை, விஞ்ஞானிகள் ஆபத்தானது என்று கூறியுள்ளனர். தற்போது தொடர்ச்சியாக வர இருக்கும் மூன்று எரிகற்களில், சிறுகோள் 163348 (2002 NN4) தான் மிகவும் பெரிய அளவு கொண்டது. இந்த விண்கல் தான் நாளை தனது பயணத்தை பூமி நோக்கி துவங்குகிறது. NEO தரவு அட்டவணையின்படி, 2002 NN4 எரிகல், ஜூன் 6 ஆம் தேதி அன்று அதிகாலை 3:20 AM UTC க்கு பூமிக்கு மிக நெருக்கமான அணுகுமுறையை உருவாக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது.

மிகவும் ஆபத்தான எரிகல்

இந்த எரிகல் மிகவும் ஆபத்தானது என்று குறிப்பிடப்படுகிறது, ஏனெனில் அதன் பரந்த பகுதி 570 மீட்டர் விட்டம் கொண்டது, கிட்டத்தட்ட ஐந்து கால்பந்து ஆடுகளத்தின் நீளத்திற்குச் சமம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமிக்கு மிக அருகாமையில் பயணிக்கும் இந்த எரிகல் துவக்கத்தில் 0.05 AU தூரத்தில் பூமியை நெருங்குகிறது. அதாவது சரியாகச் சொன்னால் 7.48 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் பூமியை நெருங்குகிறது. அதேபோல், 0.034 AU அல்லது 5.09 மில்லியன் கிலோமீட்டர் என்ற தூரத்தில் பூமிக்கு மிக அருகாமையில் கடக்கவுள்ளது.

பீதியடைய வேண்டாம்

இருப்பினும், இப்போதைக்கு இந்த எரிகல்லை நினைத்து மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும், மக்கள் எச்சரிக்கையாக இருக்க எந்த காரணமும் இல்லை என்றும் நாசா தெரிவித்துள்ளது. இந்த எரிகல் பூமியை நெருங்கும் தூரம் பாதுகாப்பானது தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமிக்கு மிக நெருக்கமான தூரம் என்றால் எவ்வளவு அருகில்

உண்மையில், பூமிக்கு மிக நெருக்கமான தூரம் என்று நாசா குறிப்பிட்டிருந்தாலும் கூட, இந்த தூரமானது பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான சராசரி தூரத்திற்கு 13 மடங்கு தூரத்தில் இருக்கிறது. இந்த எரிகல் மணிக்கு 40,140 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கிறது.

சிறுகோள் 2013 XA22 (ASTEROID 2013 XA22)

இந்த சிறுகோள் சரியாக வரும் திங்கள்கிழமை ஜூன் 8ம் தேதி அன்று மதியம் 03:40 (UTC) மணி அளவில் பூமிக்கு மிக நெருக்கமாகப் பயணிக்க உள்ளது. மாமத் எரிகல்லைக் காட்டிலும் மிக நெருக்கமாகப் பூமியை நெருங்கி இந்த சிறுகோள் பயணிக்கவுள்ளது. இந்த சிறுகோள், 2.93 மில்லியன் கிலோ மீட்டர் என்ற தூரத்தில் பூமியைக் கடக்கவுள்ளது. மூன்று விண்கற்களில் இது தான் மிகவும் சிறியது, 160 மீட்டர் விதம் கொண்டது. இந்த சிறுகோள் மணிக்கு 24,050 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கிறது.

சிறுகோள் 2010 NY65 (ASTEROID 2010 NY65)

இந்த சிறுகோள் 2010 NY65, ஜூன் மாதம் 24ம் தேதி அன்று காலை 06:44 மணி அளவில் பூமிக்கு மிக அருகாமையில் பயணிக்க உள்ளது. இது பூமியிலிருந்து 0.025 AU (3.76 மில்லியன் கிலோமீட்டர்) தொலைவில் பூமியைக் கடக்கிறது. இதன் விட்டம் உச்ச அளவு 310 மீட்டர் ஆகும்.

வழியில் ஏதேனும் குறுக்கே வந்தால் ஆபத்து உறுதி

இந்த விண்கல் 46,400 கி.மீ வேகத்தில் பூமியை நோக்கிப் பயணிக்கிறது. இந்த மூன்று சிறுகோள்களும் பூமிக்கு மிக அருகாமையில் எந்தவித பாதிப்புமின்றி பயணிக்கிறது. இதன் வழியில் ஏதேனும் குறுக்கே வந்தால் இவற்றின் தடம் மாற வாய்ப்புள்ளது, அதனால் பூமிக்கு ஆபத்து நேரிட வாய்ப்புள்ளது.