கொரோனா நோயாளிகள் உயிர்காக்கும் ஹைட்ராக்ஸி மருந்தை சாப்பிட்டால் வரும் பக்கவிளைவுகள் என்ன?

கொரோனா நோயாளிகளின் உயிர் காக்கும் மருந்தாகக் கருதப்பட்டு வந்த ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளால் நோயாளிகளுக்கு கடும் பக்கவிளைவுகள் வருகின்றன என்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை எச்சரித்துள்ளது.

குறிப்பாக இந்த மாத்திரைகளை நோயாளிகளுக்கு வழங்கினால் இதய ரத்த ஓட்டத்தில் சிக்கல், ரத்தக்கொதிப்பு, சிறுநீரகக் கோளாறு, நரம்பு, தசையில் பிரச்சினைகள் போன்றவையும் சில நேரங்களில் உயிருக்கே ஆபத்து ஏற்படுவதாகவும் எச்சரித்துள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் உயிர் காக்கும் வகையில் செயல்படுவதாக டிரம்ப் முதலில் தெரிவித்து, அந்த மருந்தை எந்தவிதமான ஆய்வுமின்றிப் பரிந்துரைத்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன் இந்த மாத்திரைகளால் பக்க விளைவுகள் வருவதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்தவுடன், தனது வார்த்தைகளில் இருந்து பின்வாங்கிய டிரம்ப் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் குறித்த ஆய்வு தேவை என்று தெரிவித்தார்

இதுகுறித்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் ஸ்டீபன் எம்.ஹான் கூறியதாவது:

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை கொரோனா நோயாளிகளுக்கு மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், நோயாளின் உடல்நலம், ஏற்கெனவே இருக்கும் நோய்கள் இவற்றை நன்கு அறிந்த பின்புதான் இந்த மாத்திரைகளை நோயாளிகளுக்கு மருத்துவர்கள் வழங்க வேண்டும்.

அதே சமயம் இதை சாப்பிட்டால் இதயக்கோளாறு, ரத்தஓட்டத்தை அதிகப்படுத்துதல், நரம்பு, தசை தளர்வு, பாதிப்பு போன்றவை ஏற்படுகின்றன. சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாக முடிந்து விடுகிறது.

நியூயோர் மருத்துவமனையில் சமீபத்தில் 84 கொரோனா நோயாளிகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின், அசித்ரோமைஸின் மாத்திரைகளால் இதயத்துடிப்பு சீரில்லாமல் சென்று பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதயத்துடிப்பு ஆபத்தான நிலைக்குச் சென்று அவர்களை மீட்டுள்ளனர்.

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை கொரோனா நோயாளிகளுக்கு வழங்குவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து முழுமையான தகவல் இல்லை. தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகின்றன என கூறியுள்ளார்.