கொரோனாவால் அதிக பலிகளை கொண்ட நாடாக மாறி வரும் பிரான்ஸ்!

கொரோனா வைரஸால் நேற்று பிரான்சில் 642 பேர் உயிரிழந்துள்ளதால், தற்போது அதிக உயிர்பலிகளை கொண்ட நாடாக மாறி வருகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக ஐரோப்பிய நாடுகளான, இத்தாலி, ஸ்பெயின், ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் கடுமையான அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இதில் ஜேர்மனியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தாலும், உயிரிழப்புகளை அந்நாட்டு அரசு தடுத்து வருகிறது.

ஆனால் ஜேர்மனியுடன் ஒப்பிடும் போது, இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் உயிரிழப்புகளை கட்டுப்படுத்துவதில் திணறி வருகின்றன.பிரான்சில் நேற்று மட்டும் 642 பேர் புதிததாக உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளது. இதன் மூலம் பிரான்சில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 19,323-ஐ தொட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் அதிக பலிகளை கொண்ட நான்காவதாக நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது.

அதுமட்டுமின்றி மூன்றாவது இடத்தில் இருக்கும் ஸ்பெயினில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 20,639-ஆக உள்ளதால், இதே நிலை பிரான்சில் இன்னும் சில நாட்கள் நீடித்தால், ஸ்பெயினை பிரான்ஸ் பின்னுக்கு தள்ளிவிடும்.

ஏனெனில் ஸ்பெயினில் இப்போது கொரோனா கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரான்சில், தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் மொத்தம் 10-வது நாளாக 5,833 பேர் குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த மார்ச் 31-ஆம் திகதிக்கு பிறகு மிகக் குறைவான அளவு ஆகும்.

மொத்த இறப்பு எண்ணிக்கையில், மருத்துவமனைகளில் 11,842 பேரும், பராமரிப்பு இல்லங்களில் 7,481 பேருமாக பதிவாகியுள்ளது. இதன் மூலம் இறப்பு விகிதம் 3.4 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.