காய்ச்சலால் அவதிப்பட்ட அரசு மருத்துவர் மரணம்!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு மகன் மரணமடைந்த துக்கம் தாங்காமல் தாயார் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை ரயான்நகர் பகுதியை சேர்ந்தவர் ஆர்.வாசுதேவன், இவரது மனைவி ஜோதிமணி.

இவர்களது மகன் ஜெயமோகன், நீலகிரியின் அல்லிமாயார் கிராமத்தில் இருக்கும் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 10ம் திகதி முதல் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த ஜெயமோகன், சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார், கொரோனாவாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது.

முடிவுகள் நெகடிவ்வாக வந்த நிலையில், டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது, இந்நிலையில் நேற்று முன்தினம் காலை சிகிச்சை பலனின்றி காலமானார்.

இவரது மரணம் பெற்றோரை கடும் சோகத்தில் ஆழ்த்திய நிலையில், துக்கம் தாங்காமல் தாய் ஜோதிமணி விஷத்தை குடித்து தற்கொலை முயன்றார்.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

ஜெயமோகன் 2007-ம் ஆண்டில் நடந்த பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்தார். அப்போது அவருக்கு முதல்- அமைச்சர் விருது வழங்கப்பட்டது. இதன்மூலம் அவருக்கு அரசு ஒதுக்கீட்டின்கீழ் மருத்துவபடிப்பு படிக்க இடம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.