தொடர்ச்சியான தும்மல் பிரச்சனையில் இருந்து விடுதலை வேண்டுமா?

பொதுவாக மழைக்காலம் தொடங்கி விட்டால் ஜலதோஷம், தும்மல், மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல் என்று பல தொல்லைகள் வரிசையில் வந்து நிற்கும். இவற்றில் தும்மல் என்பது சாதாரண உடலியல் விஷயம்தான்.

ஆனால் அந்த தும்மல் தொடர்ச்சியாக வரும் போது சற்று அதிக கவனத்தை செலுத்த வேண்டியது அவசியம். ஏனெனில் தும்மல் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன.

சுற்றுச்சூழல் அல்லது காலநிலை மாற்றம் ஏற்படும் போது, தூசி அல்லது அளவுக்கு அதிகமாக மருந்துகுளை எடுப்பதன் மூலம், வைரஸ் தாக்கத்தினாலும் வரக்கூடும்.

இதிலிருந்து விடுபட அடிக்கடி மருந்துகளை எடுப்பதை தவிர்த்து சில எளிய இயற்கை வைத்தியங்கள் சிலவற்றை கையாண்டால் போதும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • ஒரு அகலமான பாத்திரத்தில் கொதிக்கும் நீரை நிரப்பி, துணியால் தலையைமூடி 15-20 நிமிடம் ஆவி பிடியுங்கள். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை ஆவி பிடியுங்கள். இதனால் தும்மல் பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம்.
  • சூடான நீரில் சில துளிகள் புதினா எண்ணெய் சேர்த்து, அந்த நீரில் ஆவி பிடியுங்கள். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை செய்தால், தொடர்ச்சியாக வரும் தும்மலைத் தடுக்கலாம்.
  • வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பு சேர்த்து கலந்து, தினமும் 4-5 முறை கொப்பளியுங்கள்.
  • 1 ஸ்பூன் தேனில் சிறிது மிளகுத் தூள் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை சாப்பிட்டு வந்தால், தும்மல் பிரச்சனை நீங்கும்.
  • எலுமிச்சை ஜூஸில் தேன் கலந்து குடிப்பது. இதனால் எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, மூக்கில் ஏற்படும் அரிப்பில் இருந்து விடுவிக்க உதவும்.
  • 2-3 பல் பூண்டை எடுத்து நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் 2 கப் நீரை நன்கு சூடேற்றி, அதில் பூண்டை சேர்த்து 15 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி குளிர வைத்து குடித்தால், தொடர்ச்சியாக வரும் தும்மல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
  • சிவப்பு வெங்காயத்தை பொடியாக நறுக்கி, அதில் தேன் சேர்த்து கலந்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இப்படி தினமும் சாப்பிட்டால், தும்மல் பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம்.
  • இஞ்சியை பொடியாக நறுக்கி, கொதிக்கும் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தேன் கலந்து குடிக்க வேண்டும். அப்படி தினமும் குடித்து வந்தால், சைனஸ் தொற்றுக்களால் ஏற்படும் தும்மலில் இருந்தும் விடுபடலாம்
  • சுடுநீரில் சிறிது உலர்ந்த சீமைச்சாமந்தி பூக்களைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தேன் கலந்து, தினமும் 2-3 முறை குடித்து வர, தும்மல் பிரச்சனை நீங்குவதோடு, இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தையும் பெறலாம்.
  • 2 டீஸ்பூன் சோம்பை ஒரு கப் சுடுநீரில் போட்டு நன்கு 15 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தினமும் 2-3 முறை குடித்து வந்தால், சீக்கிரம் தொடர்ச்சியாக வரும் தும்மல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
  • மூக்கு பகுதிகளில் சிறிது லாவெண்டர் ஆயிலைத் தடவ வேண்டும். இப்படி செய்வதால், தும்மல் தொடர்ச்சியாக வராமல் இருக்கும்.
  • எள்ள விதைகளை பொன்னிறமாக வறுத்து, அதில் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து நன்கு கலந்து, தினமும் 2-3 முறை சாப்பிட வேண்டும். இதனால் தும்மல் பிரச்சனை நீங்குவதோடு, விரைவில் சுவாசப் பாதையில் இருக்கும் பிரச்சனைகளும் குணமாகும்.
  • நீரில் சிறிது வெந்தய விதைகளைப் போட்டு 10-15 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தினமும் 2-3 முறை குடித்தால், தும்மல் விரைவில் சரியாகும்.