நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி..

உலகம் முழுவதும் பரவியுள்ள கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்துள்ளது. இதனால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதித்துள்ளது.

மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் விநியோகம், கையிருப்பு போன்றவற்றில் மத்திய மாநில அரசுகள் மிகுந்த கவனம் செலுத்தி, மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றி கிடப்பதை உறுதி செய்துள்ளது.

மேலும், மக்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்ட உதவிகள், நிதியுதவிகள் போன்றவை அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தேவையான நிதியுதவியை மக்கள் அளிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் இந்திய பிரதமர் மோடி கோரிக்கை வைத்திருந்தனர்.

இதனடிப்படையில் பல்வேறு நபர்களும் நிதியுதவியை அரசின் வங்கிக்கணக்குகளில் செலுத்தி வரும் நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி அளித்துள்ளார். மேலும், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது.

இந்த திரைப்படத்தை இயக்குனர் வாசுவே இயக்கும் நிலையில், இப்படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை சன் குழுமம் தயாரிக்கவிருக்கும் நிலையில், இந்த படத்துக்கான முன்தொகை ரூ.3 கோடி ராகவா லாரன்ஸிற்கு வழங்கப்பட்டுள்ளது.


இந்த பணத்தில், பிரதமரின் நிதிஉதவி திட்டத்திற்கு ரூ.50 இலட்சமும், முதல்வரின் கரோனா தடுப்பு நிதிஉதவிக்கு ரூ.50 இலட்சமும், திரைப்பட பணியாளர்கள் சங்கமான பெப்சி சங்கத்திற்கு ரூ.50 இலட்சமும், நடன குழுவினருக்கு ரூ.50 இலட்சமும், ஊனமுற்றோர் சங்கத்திற்கு ரூ.25 இலட்சமும், ராயபுரம் பகுதியில் தினக்கூலிகளாக பணியாற்றி வரும் நபர்களுக்கு ரூ.75 இலட்சமும் வழங்கி உதவி செய்துள்ளார்.