வெடித்து சிதறிய கியாஸ் எரிவாயு சேமிப்பு கிடங்கு குழாய்.. 17 பேர் பலி.. நொறுங்கிய கட்டிடங்கள்..

நைஜீரிய நாட்டில் உள்ள லாகோஸ் மாகாணத்தில் அமைந்துள்ள அபுலே நகரில் கியாஸ் பதப்படுத்தும் தொழிற்சாலை இருக்கிறது. இந்த தொழிற்சாலைக்கு வெளியில் பல கியாஸ் சிலிண்டர்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில் இருக்கும் கியாஸ் குழாயின் அமைப்பில் திடீரென வெடிப்பு ஏற்பட்டு பயங்கர தீவிபத்து அரங்கேறியுள்ளது.

மளமளவென பரவிய தீயானது கண்ணிமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்து கட்டிடங்களுக்கு பரவியுள்ளது. மேலும், இந்த தொழிற்சாலைக்கு அருகேயுள்ள பெண்கள் கல்லூரி, மாணவிகள் விடுதி மற்றும் உணவகம், வீடுகளுக்கு பரவிய நிலையில், சுமார் 50 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளது.


இந்த விபத்தில் 17 சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியான நிலையில், கல்லூரி மாணவிகள் 100 க்கும் மேற்பட்டோர் தீக்காயத்தால் பாதிக்கப்பட்டனர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும், இவர்களை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.


மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. ஆப்ரிக்க நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளராக இருந்து வரும் நைஜீரியாவில் இது போன்ற விபத்துகள் அவ்வப்போது அரங்கேறி வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.