பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனா வைரஸால் பாதிப்பு!

பிரித்தானியாவில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனா வைரஸால் பீடிக்கப்படுவர் என்று இங்கிலாந்தின் துணைத் தலைமை மருத்துவ அதிகாரி டொக்ரர் ஜெனி ஹரீஸ் (Dr Jenny Harries) தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பினால் இங்கிலாந்தில் ஐந்து பேர் இறந்துள்ளனர், 321 பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனா, தென் கொரியா மற்றும் இத்தாலி போன்ற நாடுகளைவிட பிரித்தானியாவில் பாதிப்பு கணிசமாகக் குறைவு என்றபோதிலும் வரவிருக்கும் வாரங்களில் பெரிய அதிகரிப்பு ஏற்படும் எனவும் அதற்கு பிரித்தானிய அதிகாரிகள் தயாராகி வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் எவருக்கும் தொற்றாது என்று உறுதியாகக் கூறமுடியாது என்பதனால் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவார்கள்.

அவர்களில் 99% பேர் நிச்சயமாகக் குணமடைவார்கள். பெரும்பாலான மக்களுக்கு மிகவும் லேசான நோய் இருக்கும், மருத்துவமனையில் இருக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் மிகவும் பாதுகாப்பாக சரியான முறையில் வீட்டிலும் நிர்வகிக்கப்படலாம் என்று தெரிவித்தார்.

இப்போது முக்கியமான விடயம் என்னவென்றால், அந்த நோய்த்தொற்றுகளை நாம் நிர்வகிப்பதை உறுதிசெய்வதாகும். மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள், வயதானவர்கள், குறிப்பாக நாள்பட்ட அடிப்படை நிலைமைகளைக் கொண்டவர்கள் மருத்துவமனைகளைத் தொடர்பு கொண்டு சிகிச்சை பெறவேண்டும்.

மற்றவர்களை வீட்டுச்சூழலில் வைத்துப் பராமரிக்கலாம் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

தங்களைத் தற்காத்துக் கொள்ள மக்கள் செய்யக்கூடிய மிகச்சிறந்த காரியம் கைகளைக் கழுவதுடன் தும்மல் மற்றும் இருமல் போன்ற நேரங்ககளில் ரிசுக்களைப் பயன்படுத்து ஆரோக்கியத்தைப் பேணவேண்டும் என்று டொக்ரர் ஜெனி ஹரீஸ் பொதுமக்களுக்கான ஆலோசனையை வழங்கியுள்ளார்.